தீபாவளி ஸ்பெஷல் முகூர்த்த பங்குச்சந்தை நேரத்தில்…

தீபாவளி ஸ்பெஷல் முகூர்த்த பங்குச்சந்தை நேரத்தில்…

பங்குச்சந்தை முதலீடு என்பதை இன்னும் பலரும் ஒரு சூதாட்டத்துக்கு இணையாகவே புரிந்துகொண்டிருக்கின்றனர். அது ஒரு மிகத்தவறான புரிதல் என்று பங்குச்சந்தை வல்லுநர்களும் நிதி ஆலோசகர்களும் விளக்குகின்றனர். நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறீர்கள். ஆண்டின் இறுதியில் அந்நிறுவனம், தனது லாப நட்டக்கணக்குகளை சரிபார்த்து, இயக்குநரவையில் அறிவிக்கும்.

பின்னர், ஒவ்வொரு பங்குக்கும் எவ்வளவு லாபம் என்பதை அந்த அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பின்னர் நேரடியாக உங்கள் வங்கிக்கணக்குக்கு அந்த லாபத்தொகை வந்து சேரும். உங்கள் பங்கு மூலம் வந்த தொகை என்பதால் அந்தத் தொகைக்கு பங்காதாயம் (dividend) என்று பெயர்.

ஓராண்டு முழுக்க இதற்காகக் காத்திருக்க முடியாது என்பவர்கள், தங்களது பங்குக்கு கூடுதல் விலை வந்தபிறகு விற்றுவிடுவர். இதற்கு வரி உண்டு. இந்த இருவர் இல்லாமல் மூன்றாவதாக ஒரு தரப்பு உண்டு. அவர்கள், மாதக்கணக்கில்கூட காத்திருக்க மாட்டார்கள். ஒரே நாளில் விலை உயரும்போது பங்குகளை விற்பர். விலை குறையும்போது வாங்கிக்குவிப்பர். இதனைத்தான் தினசரி வர்த்தகம் (daily trading) என்கிறோம்.

பொதுவாகப் பலரும் பணத்தை இழப்பது இந்த தினசரி வர்த்தகத்தில்தான். தொழில்துறை, நாட்டு நடப்பு, உலக வர்த்தகம் என்று பலவற்றிலும் தேர்ந்த அறிவு, அவற்றைக் கற்றுக்க்கொள்ளும் ஆர்வம் இருப்போருக்கு இது பொருத்தமான ஒன்றுதான். ஆனால், இவை குறித்து எதுவும் தெரியாமல் வணிகம் செய்து சிக்கலில் சிக்கிக்கொள்வாரின் எண்ணிக்கை கணிசமானது.

இடர்களை எதிர்கொள்ளத் துணிச்சல், பொருளாதார பலம் குறைவாக உள்ளவர்கள் இதுபோன்ற ஊக வணிகத்தில் ஈடுபடாமல், நீண்ட கால முதலீட்டாளராக ஆவது நல்லது. பங்காதாயத்தை மட்டும் குறிவைத்து நீண்ட காலத்துக்கு நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம். அதேபோல, சில ஆண்டுகளில் நீங்கள் நினைத்த அளவுக்கு பங்கின் விலை அதிகரித்திருந்தால், விற்றுவிட்டுப் பணம் பார்க்கலாம்.

தற்போது 5 பைசா.காம் முதலிய பங்குவரத்தக சேவை நிறுவனங்கள் எஸ்.ஐ.பி. முறையில் (மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது) பங்குகளை வாங்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இதுபோன்ற வசதிகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

பரஸ்பர நிதித்திட்டங்களில் முதலீடு செய்யும்போது கிடைப்பதுபோல ’சராசரி விலை’ எனப்படும் (Rupee cost averaging) லாபம் உங்களுக்குக் கிடைக்கும்.

Image by Gerd Altmann from Pixabay

அதாவது, விலை அதிகமாக இருக்கும்போது வாங்குவதற்கு ஒரு செலவு ஆகும் அல்லவா… அதேபோல விலை குறையும்போது (பங்கோ, யூனிட்டோ…) குறைவான செலவில் பங்கையோ, யூனிட்டையோ வாங்குவீர்கள். மாதாமாதம் ஒரே தொகையை முதலீடு செய்யும் சூழலில் இந்த ஏற்ற இறக்கம், தானே ஒரு சம நிலைக்கு உங்கள் முதலீட்டைக்கொண்டுவந்துவிடும். எனவே, ஓரளவுக்கு நல்ல செலவில் நீங்கள் முதலீடு செய்துகொண்டிருப்பீர்கள். ஒரு கட்டத்தில் இது நல்ல லாபமாக ஆகிவிடும். இதனைத்தான் சராசரி விலை சமன்படுத்தல் என்கிறோம்.

எனவே, நீண்டகால முதலீட்டாளராக இருப்பது குறித்து யோசியுங்கள். இன்றே, நல்ல பங்குகளில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவாருங்கள். பொதுவாக, அரசு விடுமுறை நாட்களில் பங்குச்சந்தைகள் விடுமுறையில் இருக்கும். ஆனால், விதிவிலக்காக தீபாவளி திருநாளான இன்று (24 அக்) மாலை ஒருமணி நேரம் மட்டும் பங்குச்சந்தைகள் திறந்திருக்கும்.

சுபமுகூர்த்த வர்த்தக நேரம் என்று அழைக்கப்படும் இந்நேரம், இன்றைக்கு மாலை 6.15 மணி  முதல் 7.15 மணிவரை கடைபிடிக்கப்படும். தீபாவளியை லட்சுமிகரமான நாள் என்ற நம்பிக்கையைப் பின்பற்றும் லட்சக்கணக்கானோர் இன்று முதலீடு செய்ய உள்ளனர். நீங்களும் இன்றிலிருந்தே உங்கள் முதலீட்டைத் தொடங்கலாமே!

-பதவன்.

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *