பன்மொழி எனும் அற்புத சந்தை

பன்மொழி எனும் அற்புத சந்தை

இந்தியா முழுமைக்கும் ஒரே மொழியாக, தேசிய மொழியாக இந்தி இருப்பதுதான் நம்மை உலக அளவில் அடையாளப்படுத்தும், என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி தினத்தன்று சொன்னதும் நாடே சூடாகிவிட்டது.

அக்கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் காரசார விவாதங்கள் இணையத்திலும் நிஜ வாழ்விலும் மும்முரமாக உலவுகின்றன. இன்னும் அவை தொடர்கின்றன.

மொழி என்ற விஷயத்தைத் தொட்டவுடன் ஏன் இவ்வளவு பரபரப்பு தொற்றிக் கொண்டுவிடுகிறது?                                                                                                                                                                                                                                                                                      ஏனென்றால் மொழி நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. நமது பண்பாட்டு அடையாளம் என்பது நம்முடைய தாய்மொழிதான். தாய்மொழி வழக்கொழிந்து போனதால் அடையாளத்தைத் தேடுவோரை உலகெங்கும் நாம் பார்க்கமுடியும்.

அமித் ஷா

அரசியலை விடுங்கள். உண்மையிலேயே தொழில் முனைவோருக்கு இந்த ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற விஷயம் எவ்வளவு சாதகமானது தெரியுமா!

ஒரு நாட்டுக்குள் ஆயிரக்கணக்கான மொழிகள், இனக்குழுக்கள் இருப்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். ஆனால் தொழில் முனைவோருக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு.

ஒவ்வொரு மொழியைப் பேசும் இனக்குழுவுக்கும் தனித்தனி கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியம், ரசனை, வாழ்வியல் முறை இருக்கும். எனவே, ஒவ்வொரு புதிய மொழி பேசும் குழு உங்களுக்கு அறிமுகமாகும்போதும் ஒரு புதிய நாட்டுக்குள் செல்லும் உணர்வு உங்களுக்கு இருக்கும்.

தொழில் ரீதியாகப் பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய, சிக்கலான சந்தை. இது ஏகப்பட்ட தொழில் முனைவோருக்கும் ஊழியர்களுக்கும் வாய்ப்பு தரும் சந்தை. எடுத்துக்காட்டாக, ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு முதல் சவாலாக இருப்பது மொழியாகத்தான் இருக்கும்.

எடுத்துக்காட்டாக நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தை எடுப்போம். அது ஒரு ஜப்பானிய நிறுவனம். உங்களுக்கே தெரியும், ஜப்பானில் ஆங்கிலம் பேசுவோரே மிகக்குறைவு.

அங்கு ஆய்வுகள் முதல் வணிகத் தொடர்புகள்வரை எல்லாமே ஜப்பானிய மொழியில்தான் நடக்கும். அந்நிறுவனம் இந்தியாவுக்குள் தனது பெயிண்ட்டை விற்க வருகிறது. ‘ஹாய் இந்தியா’ என்று விளம்பரம் செய்தால் அதை நம்மவர்கள் பெரும்பாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, ‘நமஸ்கார் இந்தியா’ என்றுதான் கடையைத் திறக்க வேண்டியிருக்கும்.

வட இந்தியாவுக்கு அது செய்தி. ஆனால் தென்னிந்தியர்கள் அதனைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். காரணம், இந்தி மொழியானது இங்கு பெருவாரியாகப் புழக்கத்தில் இல்லை. இங்கு ‘வணக்கம் தமிழகம்’ தான் எடுபடும். அதேதான் கர்நாடக, ஆந்திர, கேரள மக்களுக்கும்.

ஆக, என்னதான் ஜப்பானிய, ஆங்கில மொழிப்புலமை வாய்ந்த ஆட்களைத் தன்னிடத்தில் (அல்லது தங்களது விளம்பர நிறுவனத்தில் ) வைத்திருந்தாலும் இந்திய மொழிகளில் விளம்பரங்களை அந்நிறுவனம் வெளியிடவேண்டிய தேவை இருக்கிறது. ஒரு மொழியில் வெளியிட்ட விளம்பரத்தை மற்றுமோர் மொழியில் மொழியாக்கம் செய்ய வேண்டி வருகிறது.

விளம்பரங்கள், பத்திரிகை செய்திக்குறிப்புகள், மொத்த வணிகர்களுடனான உரையாடல்கள், அரசு நடைமுறைகள் என்று எல்லாவற்றுக்கும் பிற மொழிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு இருக்கிறது.  

இதனால் யாருக்கெல்லாம் தொழில்/வேலை வாய்ப்பு கிடைக்கும்?

மக்கள் தொடர்பு நிறுவனங்கள்

விளம்பர நிறுவனங்கள்

மொழியாக்க வல்லுநர்கள்

உள்ளூருக்கேற்ப உள்ளடக்கத்தை மாற்றித் தருவோர் (localization experts)

ஊடகங்கள்

டப்பிங் கலைஞர்கள்

பொருட்களைத் தயாரிப்போருக்குத்தான் என்றில்லை, சேவைத்துறையிலும் மொழி சார்ந்த வல்லுநர்களுக்கு உலகளாவிய அளவில் பெரும் கிராக்கி இருக்கிறது. உலக அளவில் 2025 வாக்கில் இந்த மொழியாக்கத்துறை வணிகத்தின் மதிப்பு   43.91 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்குமாம்.

திரைப்படங்களுக்கான டப்பிங், தொலைக்காட்சித் தொடர்களுக்கான மொழியாக்கம் மற்றும் மண் வாசனையுடன் மாற்றியமைப்பது என்று ஒரு தனித்துறையே ஓசையெழுப்பாமல் இயங்கிக்கொண்டு கோடிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் ஆங்கிலத்திலேயே புழங்கிக்கொண்டிருந்த டிஸ்கவரி தொலைக்காட்சி ஒரு கட்டத்தில் தமிழ்ச்சேவையைத் தொடங்கி, இன்று அது சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஃபாக்ஸ் ஹிஸ்டரி, அனிமல் பிளானட், எஃப்.ஒய்.ஐ, டிராவல் & லிவிங் முதலிய பல்வேறு வெளிநாட்டு சானல்கள் இன்று தமிழில் வெளுத்துக்கட்டுகின்றன. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் முதல் ஆச்சி மசாலா விளம்பரங்கள்வரை அதில் வரிசை கட்டுகின்றன.

இவையெல்லாம் ஒருபக்கம் என்றால் வெவ்வேறு மொழிகளைக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் மறு பக்கம் மும்முரமாக இருக்கின்றன.

சென்னையை எடுத்துக்கொள்ளுங்களேன். தெலுகு, இந்தி, ஃப்ரெஞ்ச், ஜெர்மன், போர்த்துகீசியம், ஜப்பானிய மொழி, கொரிய மொழி, சீனம்,  ஸ்பானிஷ், ரஷ்ய மொழி முதலிய பல்வேறு மொழிகளைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இங்கு பயில்வோருக்கு வேலை வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் சிறப்பாக இருக்கிறது.

எந்த வகையில் பார்த்தாலும் பல்வேறு மொழிகள் பேசும் பகுதிகள் அனைத்துமே தொழில் நிறுவனங்களுக்குப் புதிய சந்தைதான். அதேபோல, அந்தந்த மொழிகளில் புலமை பெற்றோருக்கு அது ஒரு புதிய தொழில் வாய்ப்புதான். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றவர்களுக்கு எப்படியோ, தொழில் முனைவோருக்கு லாபகரமான ஒன்றுதான். ’ஒரே மொழி’ பேசும் இந்தியா, நமது வாய்ப்புக் கதவுகளை இறுக மூடிவிடும் என்பதே உண்மை.

நீங்கள் விரும்பும், சாத்தியமுள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மொழியின் பின்னணியில் உள்ள பண்பாட்டை, உணர்வுகளை, தொழில் வாய்ப்புகளைப் புரிந்துகொள்ளுங்கள். அதனால் விளையும் பயன்கள் ஒரு கட்டுரையில் முடியாதவை.

-அருண்மொழி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *