கொரொனா காலக் கடவுளான பார்லே ஜி பிஸ்கெட்!

கொரொனா காலக் கடவுளான பார்லே ஜி பிஸ்கெட்!

இந்தக் கொரோனா காலத்தில் பல தொழில் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக எங்கு பார்த்தாலும் அதிகரிக்கும் வேலை இழப்புகள் மக்களிடம் வாழ்க்கை மீதான அச்சத்தை அதிகரிப்படுத்தியிருக்கின்றன.

ஆனால் இதே கொரோனா காலத்தில் மேற்சொன்னவைக்கு முற்றிலும் நேர்எதிராக  பார்லே பிஸ்கட்ஸ் பிரைவேட் லிமிடெட் ( Parle Biscuits Pvt. Ltd. ) நிறுவனத்திலிருந்து வெளிவரும் பார்லே-ஜி(Parle-G) பிஸ்கெட், தனது விற்பனையில் சாதனை புரிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தச் சாதனையின் மூலம்  போட்டிகள் நிறைந்த பிஸ்கெட் தொழிலில் பார்லே பிஸ்கட்ஸ்,சந்தையில் சுமார் ஐந்து விழுக்காடு இடத்தைப் பிடித்திருக்கிறது.

நீண்ட நெடிய பாரம்பரியம்

ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் எண்பத்தியிரண்டு வருடப் பாரம்பரியம் கொண்டது இந்தப் பார்லே-ஜி பிஸ்கெட். பல தலைமுறை இந்தியர்கள் தங்களது மாலை நேரத்தை தேநீர் மற்றும் இந்நிறுவன பிஸ்கெட்களுடன்தான் கடப்பார்கள். அத்தனை பாரம்பரியச் சிறப்பு இருக்கிறது இந்நிறுவனத்துக்கு.

குறைந்த விலைபிரிவின்கீழ் வரும் இந்நிறுவனத் தயாரிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்காக து சக நிறுவனங்கள் இன்று வாயடைத்துப் போயிருக்கின்றன. அண்மையில் இந்நிறுவன பிஸ்கெட்டுகளின் விற்பனை உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

மலிவு விலையே காரணம்

எப்படி இது சாத்தியப்பட்டது என்று கேட்டால் குறைந்த விலை, உயர்ந்த தரம், ஆகிய இரண்டும்தான் தங்களுடைய வெற்றிக்குக் காரணம் என்கிறார்  பார்லே-ஜி நிறுவனத்தின் மூத்த உயர் அதிகாரியான மயங் ஷா.

குறிப்பாக ஊரடங்கு அமலுக்கு வந்தவுடனேயே இன்றியமையாத  சேவைப் பிரிவில் இருந்த பார்லே பிஸ்கட்ஸ் நிறுவனம் தனது  பிஸ்கெட்கள் தயாரிக்கும் பணியைத் துரிதப்படுத்தியது. ஊழியர்களுக்கு முறையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. பிஸ்கெட்களை இந்தியாவின் மூலை முடுக்கு வரை கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

வரலாறு காணாத விற்பனை

“கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகாலத்தில் இதுபோன்ற ஒரு விற்பனையைத் தங்களது நிறுவனம் பார்த்ததில்லை” என்கிறார் மயங் ஷா. எளிய மனிதர்களும் வாங்கும் வகையில் பார்லே பிஸ்கெட்டின் விலை இருப்பதுதான் இந்தச் சாதனைக்கு முக்கியக் காரணம் என்று கூறுகிறார் அவர்.

குளுக்கோஸை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்தக் கொரோனா காலத்தில் பார்லே பிஸ்கெட்கள் பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமான உண்ணும் பொருளாக இருப்பதாகக் கூறும் இவர், தங்களது பிஸ்கட்டின் விலை ரூ.5 லிருந்து ஆரம்பிப்பதாகவும் சொல்கிறார்.

Image by PDPics from Pixabay

ஊரடங்கில் உற்ற நண்பன்

குறிப்பிட்ட நாட்கள்வரை இதனை வைத்தும் பயன்படுத்த முடியும். எனவே,  இந்தக் கொரோனா நேரத்தில் உணவின்றித் தவிப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக நாடு முழுவதிலும்  அரசு நிறுவனங்கள்,  தொண்டு நிறுவனங்கள், மற்றும் பல்வேறு அமைப்புகள் பார்லே தயாரிப்புகளை அதிக அளவில் வாங்கி வருவதாகவும் கூறுகிறார்.

வெறும் நகரங்களை மட்டும் குறி வைக்காமல் கிராமப்பகுதிகளிலும் தங்களது பிஸ்கெட்களை கொண்டுசேர்த்ததன் மூலம் இந்த வெற்றியை இவர்கள் அடைந்திருப்பதாக “FMCG sector analysts” எனப்படும் “மிக வேகமாக நுகர்வோரால் பயன்படுத்தப்படும் பொருட்கள்” குறித்த ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மிகக் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவதற்காகக் கடுமையான பயணங்களை மேற்கொண்டபோது அவர்களுக்கு அதிக அளவில் கைகொடுத்தது இந்தப் “பார்லே-ஜி” பிஸ்கட்கள்தான் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று மிகத் தீவிர நிலையை அடையும் சூழ்நிலையில் இருப்பதால் எளிய மக்களுக்கு உதவும் வகையில் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான  பிஸ்கெட் பாக்கெட்டுகளை இலவசமாக அளிக்கப்போவதாகவும் இந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பிரபலங்களும் பார்லே -ஜி பிஸ்கெட்டுகளைப் போற்றத் தொடங்கியிருக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா, தனக்கும் பார்லே பிஸ்கெட்டுகளுக்கும் இடையிலான உறவை ட்விட்டரில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

“எனது நாடக நாட்கள் பார்லே பிஸ்கெட்களும் தேநீரும் சேர்ந்த கலவையாக இருந்தன. இனி பார்லே ஜி பிளாஸ்டிக்குக்கு பதிலாக எளிதில் மட்கும் பொருளைக்கொண்டு தயாரித்தால் நன்றாக இருக்கும்” என்று அவர் ட்வீட் செய்திருக்கிறார். இது பெரிய அளவுக்கு வைரலாகியிருக்கிறது.

தரம், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் விலையில் தயாரிப்பு ஆகியவை இருந்தால் உணவுத்தொழிலில் எந்நாளும் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு பார்லே ஒரு வாழும் எடுத்துக்காட்டு.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *