நீங்கள் அறிந்திருக்க வேண்டிய நிதிக் களஞ்சியம்

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய நிதிக் களஞ்சியம்

விக்கிபீடியா இணையதளத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். தகவல் சுரங்கமாக விளங்கும் கட்டற்ற இணைய களஞ்சியம் இந்த தளம். விக்கிபீடியா போலவே இணையத்தில் வேறு பல களஞ்சியங்களும் இருக்கின்றன. இவற்றில், நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய களஞ்சியம் என்று பார்த்தால் அது, ’இன்வெஸ்டோபீடியா’வாக தான் இருக்கும்.

இன்வெஸ்டோபீடியா (investopedia) தளத்தை இணையத்தில் நீங்களே கூட பல முறை எதிர்கொண்டிருக்கலாம். இதுவரை கவனித்தது இல்லை எனில், நிதித்துறை அல்லது பொருளாதாரம் தொடர்பான ஏதாவது ஒரு முக்கிய வார்த்தையை குறிப்பிட்டு இணையத்தில் தேடிப்பாருங்கள். அநேகமான தேடல் பட்டியலில் முதல் பக்கத்தில் உள்ள முடிவுகளில் ஏதேனும் ஒன்று இன்வெஸ்டோபீடியாவுடையதாக இருக்கும்.

இதே போல முதலீடு தொடர்பான விஷயங்களை தேடிப்பார்த்தாலும், இன்வெஸ்டோபீடியா கட்டுரை நிச்சயம் தேடல் பட்டியலில் முன்னிலை பெறுவதை பார்க்கலாம். நிதித் துறை சார்ந்த விஷயங்களில் இன்வெஸ்டோபீடியாவின் செல்வாக்கு அப்படி. இந்த விஷயங்களுக்காக பரவலாக நாடப்படும் நம்பகமான இணையதளமாக இன்வெஸ்டோபீடியா இருப்பதே இதற்கு காரணம்.

இணையம் வெகுமக்கள் மத்தியில் வளர்ச்சி அடையத்துவங்கிய காலத்தில், 1999 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த தளம் நிதி சார்ந்த தகவல்களை நாடுபவர்களின் தேவையை நிறைவேற்றுவதன் மூலம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. ஒரு கட்டத்தில் புகழ் பெற்ற வணிக இதழான போர்ப்ஸ் நிர்வாகத்தால் வாங்கப்பட்ட இந்த தளம் தற்போது, டாட் டேஷ் எனும் இணைய குழுமத்தில் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த தளத்தை நிதி விஷயங்களுக்கான இணைய களஞ்சியம் என்று வர்ணிக்கலாம். அமெரிக்காவை மையமாக கொண்ட இணையதளம் என்றாலும், இதில் விளக்கப்படும் நிதி விஷயங்களின் அடிப்படை பொதுவானவை என்பதால், யார் வேண்டுமானாலும் இந்த தளத்தை பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக, நிதி மற்றும் முதலீடு விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தளம் பல்வேறு அம்சங்களை கொண்டது என்றாலும், இதன் வழிகாட்டி பகுதி மற்றும் நிதி அகராதி ஆகியவை மிகவும் முக்கியமானவை. வழிகாட்டு கட்டுரைகளை ‘கல்வி’ மற்றும் உங்கள் பணம் அகிய பகுதிகளின் மூலம் அணுகலாம். நிதி அடிப்படைகளை கற்றுத்தரும் கல்வி பகுதி, பொது மற்றும் முதலீடு/ பங்குகள் ஆகிய இரண்டு பிரதான பகுதிகளை கொண்டது.

பொது பகுதியில், பொருளாதாரம், வர்த்தக நிதி, பங்குகள் தொடர்பான கட்டுரைகளையும், செய்திகளையும் பார்க்கலாம். இந்த பகுதியில் உள்ள நிதி அகராதி தான் இன்னும் விஷேசமானது. இந்த அகராதியில், நிதித் துறை சார்ந்த சொற்களுக்கான விரிவான விளக்கத்தை அகர வரிசையில் அணுகலாம்.

Image by Shameer Pk from Pixabay

பங்கு வர்த்தகத்தில் அடிக்கடி அடிபடும் பி/இ விகிதம் துவங்கி நிகர மதிப்பு ( நெட் வொர்த்), பணவீக்கம் ( இன்பிளேஷன்) உள்ளிட்ட முக்கிய பதங்களுக்கான விரிவான பொருளை இந்த அகராதி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிதித் துறை தொடர்பாக எந்த ஒரு கருத்தாக்கத்தை விளக்கி கொள்ள வேண்டும் என்றாலும் சரி, இந்த அகராதியை நாடலாம்.

உங்கள் பணம் பகுதி, தனிநபர் நிதி விஷயங்களுக்கானது. முதலீடு செய்வது மூலம் செல்வ வளத்தை உருவாக்கி கொள்வதில் துவங்கி, வீட்டு செலவை கட்டுப்படுத்த பட்ஜெட் போடும் வழிமுறைகள், சேமிப்பு பாடங்கள், வங்கிச்சேவை தகவல்கள், கிரெடிட் கார்டு பயன்பாடுகள் போன்றவை தொடர்பான கட்டுரைகளை இந்த பகுதியில் அணுகலாம். வரிகள், ஓய்வு கால திட்டமிடல், காப்பீடு ஆகியவை குறித்தும் கட்டுரைகளை காணலாம்.

நெருக்கடி காலங்களில் கைகொடுக்கும் அவசர கால நிதியை உருவாக்கி கொள்வது எப்படி? என்பது போன்ற கட்டுரைகளோடு, வரலாற்றின் மிகப்பெரிய செல்வந்தார் யார்? என்பது போன்ற சுவாரஸ்யமான கட்டுரைகளையும் வாசிக்கலாம். நிதித் துறை செய்திகளுக்கான தனிப்பகுதியும் இருக்கிறது.

பங்குச்சந்தை செயல்படும் விதத்தை புரிந்து கொள்ள உதவும், பங்குச்சந்தையின் டிஜிட்டல் மாதிரியையும் இந்த தளம் கொண்டுள்ளது. அமெரிக்கர்கள் எனில், இந்த தளம் மூலமே முதலீடு ஆலோசனைகளை பெறலாம். மற்றவர்கள் இதில் உள்ள கட்டுரைகளை வழிகாட்டியாக கொள்ளலாம்.

நிதி விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால், இந்த தளத்தில் உள்ள முதலீடு அகாடமி பகுதியை நாடலாம். பங்குச்சந்தை பாலபாடத்தை கற்றுத்தரும் பாடத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகளை இந்த பகுதி அளிக்கிறது. இணையம் மூலமே பயிலலாம். (கட்டணம் உண்டு).

இன்வெஸ்டோபீடியா தளத்தை குறித்து வைத்துக்கொண்டு அடிக்கடி பயன்படுத்துவது, நிதி அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். அதோடு, இணையத்தில் தகவல்களை தேடும் போது, இந்த தளத்தின் முடிவுகள் கண்ணில் பட்டால், அதன் நம்பகத்தன்மை குறித்த உறுதியோடு அணுகலாம்.

இணையதள முகவரி: https://www.investopedia.com/

 

(சைபர்சிம்மன், சுயேட்சை பத்திரிகையாளர், வலைப்பதிவாளர், நூலாசிரியர், ’இணைய மலர்’ மின்மடல் ஆசிரியர்).

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.