மனிதம் போற்றுதும்–  ரத்தன் டாட்டாவின் வாழ்க்கைப்பாடம்

மனிதம் போற்றுதும்–  ரத்தன் டாட்டாவின் வாழ்க்கைப்பாடம்

தொழிலை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதும் வருமானம் பார்ப்பதும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மனிதம் பேணுவதும்  முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை வணிக உலகத்திற்குச் சொல்லியிருக்கிறார் டாட்டா குழுமங்களின் தலைவரான ரத்தன் டாட்டா.

அப்படி என்னதான் செய்துவிட்டார் அவர்? பூனேயில் வசிக்கும் தனது நிறுவனத்தின் முன்னாள் ஊழியரைச் சந்திப்பதற்காகவே ரத்தன் டாட்டா மும்பையிலிருந்து பூனே சென்றிருக்கிறார். பின்னர் இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அந்த ஊழியரையும், அவரது குடும்பத்தையும் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். இவரது இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பேரன்பைப் பெற்றிருக்கிறது.

நான் எவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன்பார் என்று ஊருக்குத் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காக ரத்தன் டாட்டா அவராகவே இந்தப் புகைப்படத்தை வெளியிடவில்லை. பூனேயில் உள்ள ‘பிரெண்ட்ஸ் சொசைட்டி’ என்கிற இடத்தில்தான் ரத்தன் டாட்டா அந்த ஊழியரை அவரது குடும்பத்துடன் சந்தித்திருக்கிறார். அப்போது அதே இடத்தில் இருந்த யோகேஷ் தேசாய் என்ற மற்றொரு தொழில்முனைவோர் எதேச்சையாக இந்தச் சந்திப்பைப் பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்திருக்கிறார்.

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது ஊழியரைப் பார்ப்பதற்காக மட்டுமே இந்தப் பூனே பயணத்தை ரத்தன் டாட்டா மேற்கொண்டார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்ட யோகேஷ் தேசாய் இந்தப் புகைப்படத்தை தனது லிங்க்டு இன் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘எவ்வித ஊடக வெளிச்சமும் கிடையாது. பாதுகாவலர்கள் இல்லை. தன் நிறுவனத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலைசெய்த ஊழியரை பார்ப்பதற்காகத் நேரில் வந்து எத்தனை எளிமையாகத் தன் அன்பைக் காட்டிவிட்டார். இவரது இந்தச் செயல் இந்தியாவில் இருக்கும் அத்தனை தொழில்முனைவோருக்கும் ஒரு பாடம். பணத்தைவிட சிறந்த மனிதராக இருப்பதே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்பதை ரத்தன் டாட்டா உணர்த்திவிட்டார்’ என்று நெகிழ்ச்சியுடன் அப்புகைப்படம் குறித்த கருத்தையும் அங்கே எழுதியிருக்கிறார் யோகேஷ்.

லிங்க்டு-இன் பக்கத்தில் யோகேஷ் இதனைப் பதிவிட்ட இந்த இரண்டே நாட்களுக்குள் இதனைப் பாராட்டி கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கருத்துக்கள் வந்து குவிந்துவிட்டன.

இதுதவிர முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்கள் ரத்தன் டாட்டாவை வாழ்த்து மழையால் திணற வைத்துக்கொண்டுள்ளனர்.

-சு.கவிதா

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *