தொழில்முனைவோர் கட்டாயம் எடுக்கவேண்டிய புத்தாண்டு உறுதிமொழிகள்

தொழில்முனைவோர் கட்டாயம் எடுக்கவேண்டிய புத்தாண்டு உறுதிமொழிகள்

1.இந்தப் புத்தாண்டு முதலாவது உங்களது நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் சார்ந்த விஷயங்களை என்ன ஏதுவென்று கவனித்துத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். கணக்குவழக்குகள் என்பது உங்களது நிறுவனத்தின் நிதிப்பிரிவு அல்லது கணக்காளர் மட்டும் செய்யவேண்டிய வேலை அல்ல என்பதை உணர்ந்திடுங்கள்.

2.புதிய ஆண்டில் உங்களது உடல் நலம் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்திடுங்கள். தொழில்… தொழில் என்று மட்டுமே இருந்தால் உங்களது உடல் வீணாகிவிடும். எனவே உடல் ரீதியில், மன ரீதியில் குறிப்பாக உணர்வு ரீதியில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சமச்சீரான உணவு, உடற்பயிற்சி ஆகிய இரண்டுடன் பதட்டமில்லாத மகிழ்ச்சியான மனநிலை, போதுமான அளவு உறக்கம் போன்றவற்றையும் இணைத்துக்கொண்டு சிறப்பான தொழில்முனைவோராக புதிய ஆண்டுமுதல் வலம் வாருங்கள்.

3.வரும் ஆண்டு முதல்  தினமும் குறைந்தபட்சம் ஒருமணிநேரமாவது குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள். அவர்களுடன் மனவிட்டுப் பேசி மகிழ்ச்சியுடன் இருங்கள். இப்படி குடும்பத்துடன் இணைந்து இருக்கும்பொழுது மனதளவில் நம்பிக்கையுடன் உணர்வீர்கள். ’நமக்காக நம் குடும்பம் இருக்கிறது’ என்கிற எண்ணம் உங்களை தன்னம்பிக்கையுடன் தொழிலை எதிர்கொள்ள வைக்கும்.

4.“சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவது நேரவிரயம் ” என்கிற எண்ணம் தொழில்முனைவோர் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது அப்படியன்று. உங்களது வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், முதலீட்டாளர்களுடன் உரையாடல் நிகழ்த்துவதற்கும், நீங்கள் செய்யும் தொழில் சார்ந்த அண்மைய தகவல்களை அறிந்துகொள்வதற்கும் சமூக ஊடகங்கள் உதவிசெய்யும். எனவே புத்தாண்டு முதல் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5.தொழில்முனைவோர்  தங்களது தொழில் சார்ந்த செய்திகளை மட்டுமே அறிந்துகொள்வதில் பொதுவாக விருப்பம் காட்டுவர். ஆனால் நம்மைச் சுற்றி, இந்த உலகத்தைச் சுற்றி என்ன நடக்கிறது; அவை நாம் சார்ந்திருக்கும் தொழிலை பாதிக்கின்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை கவனிக்கவேண்டியது அவசியம். எனவே  இந்தப் புத்தாண்டு முதல் நாட்டுநடப்புகளை, உலகநடப்புகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

6.திறமைசாலிகளைப் பணியில் அமர்த்துங்கள். இந்தப் புத்தாண்டில் உங்கள் நிறுவனத்துக்காக ஆட்களைப் பணியமர்த்தும்போது கொஞ்சம் மெனக்கெட்டு திறமைசாலிகளை அடையாளம் கண்டு வேலைவாய்ப்பைக் கொடுங்கள். திறமைசாலிகள் உங்களது நிறுவனத்தின் வளர்ச்சியை நிச்சயம் அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்றுவிடுவர்.

7.இந்தப் புத்தாண்டில் புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ளுங்கள். இப்பொழுதெல்லாம் கணக்குப் பதிவியல், சந்தைப்படுத்தல், மேடைப்பேச்சுக்கலை என்று இணைய வகுப்புகள் பலவும் இலவசமாகவே கிடைக்கின்றன.

அதேபோல நிதிநிர்வாகம் குறித்த சிறப்பான புத்தகங்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவைற்றையெல்லாம் பயன்படுத்தி உங்களது திறமைகளை மேலும் மெருகேற்றிக்கொள்ள இந்தப் புத்தாண்டில் தீர்மானம் எடுத்துக்கொள்ளுங்கள்.

8.தொழில்முனைவோர் என்றால் சதாசர்வகாலமும் அலுவலகத்தில் மட்டுமே பழியாய்க் கிடக்கவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் அலுவலகத்திலேயே இருந்தால் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அவ்வப்பொழுது தனிப்பட்ட முறையிலோ அல்லது அலுவலகம் சம்பந்தமாகவோ பயணப்படுங்கள். பயணங்கள் உங்களைப் புத்துணர்வாக்கும். புதிய சிந்தனைகளை உருவாக்கும்.

9.இனி அலுவலகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற உறுதிமொழியை மறக்காமல் எடுங்கள். இதனை உடனே செயல்படுத்தவும் செய்யுங்கள். ஏனென்றால் வேலைசெய்யும் இடம் சுத்தமாக இருந்தால் ஒருவித நேர்மறை எண்ணங்களால் அவ்விடம் சூழும். இது, அலுவலகம்/தொழிலகத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.

10.இந்தப் புத்தாண்டில் உங்களது நிறுவனத்தின் இணையதளத்தைப் புதுப்பிக்க மறக்காதீர்கள். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே இப்பொழுதும் இணையதளம் இருந்தால் உங்களது நிறுவனத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைக்காது. அதுமட்டுமல்லாமல் உங்களது ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து ஒருவித அதிருப்தி நிலையும் மேலோங்கும்.

எனவே ஒவ்வொரு ஆண்டும்ம் நிறுவனத்தின் இணையதளத்தை புதுப்பிப்பது, தேவையெனில் இணையப் பக்கங்களில் மாற்றங்கள் செய்வது போன்றவற்றை செய்யவும் மறக்காதீர்கள்.

11.உங்களது நிரந்தர வாடிக்கையாளர்கள், புது வாடிக்கையாளர்கள்  குறித்த விவரங்களை இந்தப் புத்தாண்டில் மறக்காமல் உற்றுநோக்குங்கள். அவர்களில் யாரெல்லாம் உங்களுடன் தொடர்ந்து பயணிக்கின்றனர்? யாரெல்லாம் பாதியிலேயே விலகிவிட்டனர் என்பதையும் கவனியுங்கள். வருடம் முழுவதும் சீரிய இடைவெளிகளில் இதுபோன்ற பகுப்பாய்வுகளை செய்து இதன் முடிவுகளுக்கு ஏற்ப  உங்களது தொழில் அணுகுமுறையில் மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்.

-பாலா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *