ஸ்பைஸ் குயின்! -சிங்கப்பூரைக் கலக்கிவரும் தமிழச்சியின் கதை!!!

ஸ்பைஸ் குயின்! -சிங்கப்பூரைக் கலக்கிவரும் தமிழச்சியின் கதை!!!

தேவகி சண்முகம் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண். சமையல் சம்பந்தமாக எந்த ஒரு தொழில்முறைப் படிப்பையும் இவர் படிக்கவில்லை. எந்த ஒரு ஹோட்டலிலும் சமையல் கலைஞராகப் பணிபுரிந்ததில்லை. ஆனால் தனக்கு நன்கு தெரிந்த சமையல் கலையை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக்கொண்டு வாய்ப்புகளைத் தேடிப் பிடித்து முன்னேறி, இன்று தலைசிறந்த உணவு ஆலோசனை நிபுணராக, நிற்க நேரம் இல்லாமல்,பரபரப்புடன் உலகை வலம் வருகிறார். அதுமட்டுமல்ல “ஸ்பைஸ் குயின்” என்று சிங்கப்பூர் மக்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள்.


தேவகி சண்முகம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சிங்கப்பூரில். வாழ்க்கை இவருக்கு ரோஜாப்படுக்கையாக இருக்கவில்லை. வறுமையின் ஆதிக்கத்தில்தான் இவர் வளர்ந்தார்.
“எங்கள் பெற்றோருக்கு நாங்கள் மொத்தம் ஏழு குழந்தைகள். எங்கள் ஆரம்ப கால வாழ்க்கை சலனம் இல்லாமல்தான் போய்கொண்டிருந்தது. ஆனால் 1965-ல் அப்பா, அதுவரை பார்த்துக்கொண்டிருந்த வேலையை இழக்க நேரிட்ட பிறகுதான் ஆரம்பித்தது சாப்பாட்டுப் பிரச்னை. நிறைய நாள் பட்டினிதான். இந்த சூழ்நிலையில்தான், எங்களைப் போல் சாப்பாட்டுக்கே சிரமப்படுகிறவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு அப்போது சோயாபீன்,சோளம்,பால்பவுடர்,முழுகோதுமை,ஸ்பகெட்டி போன்ற உணவுப் பொருட்களை வழங்கி உதவி செய்தது.
இதில் ஒரு நகைச்சுவையான செய்தி என்னவென்றால் சேமியா போல இருக்கும் இத்தாலிய உணவுப் பொருளான ஸ்பகெட்டியை எப்படி சமைக்க வேண்டும் என்று என் அம்மாவுக்கு அப்போது தெரியாது. அதை வைத்து சேமியா பாயசம் போல ஏதோ ஒன்று செய்வார். இது போன்ற சம்பவங்களுக்குப் பிறகுதான் விதவிதமான உணவு வகைகளின் மேல் ஒரு ஆர்வம் வந்தது. உணவு வகைகளின் படத்தை எந்தப் பத்திரிகைகளில் பார்த்தாலும் அதை கத்தரித்து சேகரிக்க ஆரம்பித்தேன். அதைப் பற்றி தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்தேன். அப்போது ஆரம்பித்த அந்த உணவுப் பைத்தியம் இன்று வரை குறைவில்லை” என்கிற தேவகி வளர்ந்த பிறகு வாழ்க்கை ஜீவனத்திற்காக ஒரு பள்ளியில் கிளர்க்காகப் பணிபுரிய ஆரம்பித்தார்.
சரி,பிறகெப்படி இவரது பாதை எப்படி சமையல் பக்கம் திரும்பியது என்று கேட்கிறீர்களா? இதைப்பற்றி அவரே சொல்கிறார் கேளுங்கள்.
“எல்லாப் பெண்களையும் போல நானும் உரிய நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன். கணவருக்கு ருசிருசியாக சமைத்துப் போட ஆரம்பித்தேன். அப்போதுதான் சமையல் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை என்னவர் புரிந்து கொண்டார். பள்ளி வேலையை ராஜினாமா செய்து விட்டு குக்கரி வகுப்புகள் எடுக்கச் சொல்லி ஆலோசனையும் தந்தார். அவ்வளவுதான். உலகத்தையே ஜெயித்தது போன்ற மகிழ்ச்சி எனக்குள் வந்தது. அக்கம் பக்கம்,மற்றும் தெரிந்தவர்களுக்கு சமையல் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். சின்னச் சின்ன குடும்ப விழாக்களுக்கு கேட்டரிங் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தது.
இதுமட்டுமல்ல சமையல் கலை குறித்து எழுதும் திறனும் எனக்கு இருந்ததால் பிரபலமான பத்திரிக்கை ஒன்றில் உணவு பற்றிய தொடரையும் எழுத எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக வருமானமும் வர ஆரம்பித்தது.” என்கிற இவர் தனக்கு வர ஆரம்பித்த வருமானத்தை செலவு செய்யவில்லை. அவற்றை தன்னுடைய தொழிலுக்கான மூலதனமாக மாற்றினார்.
“ எல்லோரும் செய்வது போல நான் பணத்தை சேமிக்கவில்லை. அந்தப் பணத்தைக் கொண்டு நிறைய ஹோட்டல்களுக்குச் சென்று வித விதமான உணவுவகைகளை ருசி பார்ப்பேன். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்வேன். தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றால், நூலகங்களுக்குச் சென்று முழு தகவல்களையும் தேடி எடுப்பேன். இப்படி ருசி பார்ப்பது, இன்னவேடிவ்வாக ஒரு உணவை செய்து பார்ப்பது, சமையல் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது என்று என் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.” என்கிற இவர் அதன் பிறகு சமையல் துறையில் அடுத்த கட்டத்திற்கு போக முடிவெடுத்தார்.
கிழக்காசிய நாடுகளுக்கு இந்திய மசாலாக்களின் ருசி,மற்றும் மருத்துவ மகிமையை சொல்ல ஆசைப்பட்ட இவர் அதற்காகவே ஒரு நல்ல ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்து தான் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்று “ஸ்பைஸ் குயின்” என்ற உணவகம் ஒன்றை சிங்கப்பூரில் ஆரம்பித்தார்.
உணவகம் நன்றாக இயங்க ஆரம்பிக்க சிங்கப்பூர் மக்கள் இவரை “ஸ்பைஸ் குயின்” என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த புகழ் கிடைத்த தைரியத்தில் நிறைய சமையல் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் இவர். அந்த வகையில் “பனானா லீப் டெம்ப்டேஷன்” (BANANA LEAF TEMPTETION)புத்தகம் பிரபலமான ஒன்று.


எப்படி இந்தப் பெண்ணுக்கு மட்டும் தோல்விகளே வராமல் தொழில் செய்ய முடிந்திருக்கிறது என்கிற எண்ணம் இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு வரக்கூடும்.


ஆனால் இந்தத் துறையில் எண்ணற்ற தோல்விகளை சந்தித்த பிறகே உயரம் தொட ஆரம்பித்திருக்கிறார் தேவகி.
“உணவகம் ஆரம்பிப்பதற்கு முன்பு “மசாலா வர்த்தகம்” செய்து வந்தேன். அதில் மிகப் பெரிய நட்டம் ஏற்பட்டது. அதிலிருந்து உடனே என்னால் மீள முடியவில்லை. அது மட்டுமல்ல சொந்த வீட்டை விற்று நடத்தி வந்த அந்த உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியாதபடி என்னுடைய உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

அதனால் ரெஸ்டாரன்ட்டையும் விற்றேன். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தேன்.” என்கிற இவர் எடுத்த கடைசி அவதாரம்தான் குக்கிங் கன்சல்டன்ட். அதாவது சமையல் ஆலோசகர்.


“இத்தனை ஆண்டு காலம் எனக்குக் கிடைத்த சமையல் அனுபவங்கள் என்னை ஆலோசகராக மாற்றி விட்டது. சமையல் பற்றிய ஒர்க் ஷாப்கள் நடுத்துவது, சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை, ஜப்பான்,இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளில் இருக்கும் மிகப் பெரிய நட்சத்திர உணவகங்களின் சமையல் நிபுணர்களுக்கு “எப்படி ஒரு உணவை புதுவிதமாக மேம்படுத்திச் செய்வது” என்பதை சொல்லிக் கொடுப்பது, காதலர் தினம்,புத்தாண்டு போன்ற நாட்களில் ஒவ்வொரு ஸ்டார் ஹோட்டல்களுக்கும் “தீம் உணவை” (THEME FOOD) தயார் செய்து கொடுப்பது…….என்று தேவகி பம்பரமாய் சுழன்று வருகிறார்.


2004-ல், சுனாமி பேரலை ஆசிய நாடுகளை கபளீகரம் செய்ததை மறக்க முடியுமா? அப்போது தன் கையில் இருந்த பணத்தோடு தெரிந்தவர்கள் எல்லோரிடமும் நிதி வசூல் செய்து அந்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு தேவகி இலங்கைக்கு சென்றிருக்கிறார். அங்கே சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தொடர்ந்து பத்து நாட்கள் தங்கி அங்கிருந்த மக்களுக்கு சமைத்துப் போட்டிருக்கிறார்.


“ மிகப் பெரிய நட்சத்திர உணவகங்களில் நான் பணிபுரிந்திருக்கிறேன்தான். ஆனால் அவையெல்லாம் தராத ஒரு மனநிறைவை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்துப் போட்டபொழுது நான் உணர்ந்தேன் ” என்று நெகிழ்கிறார் இந்த சிங்கப்பூரின் ஸ்பைஸ் குயின்.


Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.