ஸ்டெர்லைட் விவகாரம்: வியூக வறுமை

ஸ்டெர்லைட் விவகாரம்: வியூக வறுமை

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நமது அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களின் மனவோட்டத்துக்கும் இடையேயான இடைவெளி விரிவடைந்துகொண்டே போகிறது. சித்தாந்த ரீதியாக என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். நடைமுறைப்பிரச்சனைகளில் எவ்விதமான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதிலும்கூட இந்த முரண்பாடு பல்கிப் பெருகுவது தமிழகத்தின் நலனுக்கு உகந்ததன்று.

இதுவரை…

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தொடக்கம் முதலாகவே மாசுபாடு குறித்த விழிப்புணர்வை தூத்துக்குடி மக்கள் பெற்றிருந்தனர். அதனை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு ம.தி.மு.க. கட்சியின் தலைவரான திரு.வை.கோ, ஒரு நெடிய சட்டப்போராட்டத்தை நடத்தினார். பொதுமக்களின் போராட்டங்களும் உடன் சேர, ஸ்டெர்லைட் மூடப்பட்டது. தமிழக அரசும் அந்நிறுவனத்தை இயங்க அனுமதிக்கப்போவதில்லை என்ற முடிவெடுத்தது. இதுவரை நடந்தவை எல்லாமே நல்லபடியாகவே நடந்தன.

சரியான அஸ்திரம்

ஆனால், அதன்பிறகு நடந்தவை எவையுமே ரசிக்கத்தக்கவையாக இல்லை. தற்போது ஸ்டெர்லைட் எடுத்த வியூகம், மிகவும் ராஜதந்திரமானது. ’எங்களால் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். மக்களின் தேவைக்காக… அதற்கு மட்டுமாவது அனுமதி தரவேண்டும்’ என்று கோரியது ஸ்டெர்லைட்.

உடனடியாக சூழலியலாளர்களும் பொதுமக்களும் சுதாரித்துக்கொண்டு, ‘இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தன் தொழிற்சாலையைத் திறக்கப்பார்க்கிறது வேதாந்தா குழுமம்’ என்று எச்சரித்தனர். இதுதொடர்பான கருத்துக்கேட்புக்கூட்டம் நடைபெற்றபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கடும் கண்டனத்தைப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அனைத்துக்கட்சிக்கூட்டம்

உடனே தமிழக அரசு, அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக்கூட்டியது. அதில் கலந்துகொண்ட கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்காகத் திறக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டன. இதனையடுத்து சமூக ஊடகங்களிலும் நேரிலும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

விஷயம் அத்தோடு முடிந்துவிடவில்லை. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் மட்டும்தான் தயாரிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட இருக்கிறது. அதில் உள்ளூர்க்காரர்கள் யாரும் இடம்பெறக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை விதித்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமம்.

அதனை அப்படியே மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு ஏற்கவில்லை. ‘உள்ளூர் மக்கள் அக்குழுவில் கட்டாயம் இடம்பெற வேண்டும்’ என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் வல்லுநர் யாராவது இடம்பெற வேண்டுமா என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு “அப்படி ஒரு வல்லுநர் தமிழகத்திலேயே கிடையாது” என்று வேதாந்தா குழுமம் சொல்லிவிட்டது. தற்போது உள்ளூர் மக்களும் குழுவில் இடம்பெறலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிட்டது. இதுமட்டும் ஆறுதல் அளிக்கிறது.

உரிமை உண்டா?

இந்நிலையில் அடுத்த அஸ்திரத்தையும் வீசியது மத்திய அரசு. ‘ஆக்சிஜன் தயாரிப்பது மட்டுமே ஸ்டெர்லைட்டின் வேலை. மற்றபடி, அதனை யாருக்குத்தர வேண்டும் என்று முடிவு செய்து பிரித்தளிக்கும் அதிகாரம் எங்களுக்கே உண்டு’ என்றும் சொல்லிவிட்டது மத்திய அரசு.

’ஸ்டெர்லைட், தமிழக நிறுவனம்தானே…அங்கு ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டால் தமிழகத்துக்குத்தானே கொடுத்தாக வேண்டும்…இதில் நமக்கு நல்ல பெயர்தானே கிடைக்கும்!’ என்று எண்ணிய அனைத்துக்கட்சிக்கூட்ட தீர்மானம் பயனற்றதாகிவிட்டது.

நிலைமை கைமீறிப்போனதை உணர்ந்த தமிழக அரசும், ‘ஆக்சிஜன் வழங்குவதில் தமிழகத்துக்கு முன்னுரிமையாவது கொடுங்கள்” என்று கேட்கத்தொடங்கிவிட்டது.

வெற்றி!

ஆக, எல்லா வகைகளிலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் காய்நகர்த்தல்கள் அதற்கு வெற்றியை ஈட்டித்தந்துவிட்டன. மூடிய தொழிற்சாலையைத் திறக்க அனைத்துக்கட்சி அனுமதியையும் பெற்றாகிவிட்டது. இனி, அதற்கு எதிரான கருத்துக்கள் அனைத்தும் ‘ஆக்சிஜன் வழங்க முட்டுக்கட்டைகள்’ என்றே பார்க்கப்படும்.

 

அதேபோல ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் உற்பத்தியில் முழு உரிமையோ, முன்னுரிமையையோ நாம் கோர முடியாத சூழல். இது பொதுமக்களை மிகுந்த வருத்தத்துக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியிருக்கிறது.

ஸ்டெர்லைட்டின் நன்றி அறிவிப்பு

உச்சநீதிமன்றம், தொழிற்சாலையைத்திறக்க அனுமதியளித்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றம், மாநில, மத்திய அரசுகளுக்கு நன்றி தெரிவித்து ஸ்டெர்லைட், தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இடைவெளி

ஆக, பொதுமக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் தமிழக அரசியல் கட்சிகள் தவறிவிட்டன என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது (விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி முதலிய சில கட்சிகளைத்தவிர). ஒவ்வொரு கட்சியும் குறைந்தபட்சம் தங்களது மாவட்டச்செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகளை அழைத்தாவது கருத்துக்கேட்டபிறகு தங்களின் நிலைப்பாட்டை முடிவு செய்திருக்கலாம்.

அல்லது அனைத்துக்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து, தூத்துக்குடியில் ஒரு கருத்துக்கேட்புக்கூட்டத்தை நடத்தி, பொதுமக்களின் நாடித்துடிப்பைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கலாம். இவை எல்லாமே தவறவிடப்பட்டுவிட்டன.

இணைப்பு அவசியம்

இதன்விளைவாக, அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பது தெளிவாகவே புலனாகிறது. அரசியல் கட்சிகள், மக்களின் உணர்வுகளைத்தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பேச்சுவார்த்தைகளில் முடிவுகளை எடுப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். இல்லையேல், இன்றைய அரசியல் ஜனநாயகத்தின்மீது மக்கள் வெறுப்படையவே செய்வர். அதன் ஒரு சான்றாகவே, தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிக்கை சரிவடைவதைச் சொல்லலாம்.

பெருநிறுவனங்கள், வணிக விஷயங்கள், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை ஆகிய அம்சங்களில் தமிழக அரசியல் கட்சிகள் வியூக, நிலைப்பாடுகளை எடுப்பதில் இன்னுமே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *