ஊக்கம் அளிக்கும் வீடியோ உரைகளுக்கான இணையதளம்

ஊக்கம் அளிக்கும் வீடியோ உரைகளுக்கான இணையதளம்

நீங்கள் யூடியூப் தளத்தை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அந்த தளத்தில் உங்களுக்கு என அபிமான சேனல்களும் பல இருக்கலாம்.

இது தவிர, பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக ஊடகங்களிலும் நீங்கள் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கலாம். இன்னும் பல்வேறு வீடியோ சார்ந்த தளங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

வீடியோ பிரியராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய வீடியோ இணையதளம் ஒன்று இருக்கிறது. டி.இ.டீ (டெட்) என குறிப்பிடப்படும் கருத்தரங்க நிறுவனத்தால் நடத்தப்படும் இணையதளம் இது. – https://www.ted.com/

ஊக்கம் தரும் வீடியோ உரைகளின் இருப்பிடமாக இந்த தளம் விளங்குகிறது. இந்த உரைகளுக்கு என்று ஒரு விஷேசத் தன்மை இருக்கிறது. டி.இ.டீ தளத்தில் உள்ள ஏதேனும் ஒரு உரையை கேட்கும் போதே நீங்கள் இதை உணரலாம். உங்களை அறியாமல் இந்த உரைகளுடன் நீங்கள் ஒன்றிப்போய் விடுவீர்கள். காரணம், இந்த உரையை நிகழ்த்துபவர்கள் உங்களுடன் நேரடியாக பேசுவது போலவே இருக்கும்.

அவர்கள் பேசுவது உங்கள் உள்ளத்தை தொடுவதாக இருக்கும். உள்ளத்தில் உள்ள தடைகளையும், தயக்கங்களையும் தகர்த்தெறிவதாகவும் இருக்கும். சோர்வான மனநிலையில் இருந்தால் கூட, அதை மாற்றி உத்வேகம் கொள்ள வைக்கும். முக்கியமாக ஒரு சிந்தனை பொறியை, செயல்படுவதற்கான தூண்டுதலை உங்கள் மனதில் பற்ற வைக்கலாம்.

உண்மையில், இந்த உரைகளின் நோக்கமே இது தான். ’பகிர்வதற்கு தகுதி வாய்ந்த எண்ணங்கள்’, என்றே இந்த உரைகளின் மையக்கருத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் இடம்பெறும் உரைகள் எல்லாம், வெற்றியாளர்களால் நிகழ்த்தப்பட்டவை. வெற்றியாளர்கள் என்றால், தடைகளை கடந்தவர்கள், சவால்களை சந்தித்தவர்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் தங்களுக்கான பாதையை கண்டறிந்து அதில் பயணிப்பவர்கள் என்றும் கொள்ளலாம். இவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பது தான் இந்த உரைகளின் சிறப்பம்சம்.

பலவிதமான நிகழ்ச்சிகளில் பலவிதமான உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. கருத்தரங்குகள், மாநாடுகளில் சிறப்பு விருந்தினர்கள் முக்கிய மணிக்கணக்கில் பேசுவது உண்டு. இவற்றில் பல அலுப்பூட்டக்கூடியதாக இருக்கலாம். பேச்சாளர்கள் வாழ்க்கையில் தாங்கள் கற்ற பாடத்தை அல்லது அதன் உள்ளொளியை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் ஒரு சில உரைகள் அமைவதுண்டு. இத்தகைய தருணங்களுக்கு நாம் காத்திருக்க வேண்டும்.

ஆனால், இது போன்ற தருணங்களை அளிப்பதற்காக என்றே ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டால் எப்படி இருக்கும்? அந்த உரைகளை கேட்கும் போது ஊக்கம் உண்டாகும் அல்லவா! இதை தான் டி.இ.டீ செய்து கொண்டிருக்கிறது.

டி.இ.டீ என்பது டெக்னாலஜி, எண்டெர்டெயின்மண்ட் அண்ட் டிசைன் என்பதன் சுருக்கமாகும். இந்த மூன்று துறைகளிலும் கவனம் செலுத்தி, துறை சார்ந்த வல்லுனர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் நோக்கத்துடன் கடந்த 1984 ம் ஆண்டு ஊடக ஏற்பாட்டு நிறுவனமாக துவக்கப்பட்டது. ரிச்சர்டு உர்மன் (Richard Saul Wurman) என்பவர், ஹார் மார்க்ஸ் எனும் கட்டிடக்கலை வல்லுனருடன் இனைந்து இந்த நிறுவனத்தை துவக்கினார். ஆண்டுதோறும், ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தி அதில், பிரமுகர் ஒருவரை உரையாற்ற வைப்பது என்பது அவரது எண்ணமாக இருந்தது.

புதுமையான முறையிலும் திட்டமிடப்பட்டிருந்தாலும், நிறுவனம் நடத்திய முதல் டி.இ.டீ கருத்தரங்கம் பொருளாதார நோக்கில் நஷ்டத்தை உண்டாக்கியது. ஆறு ஆண்டுகள் கழித்து தான் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. 1990 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மாநாடு நடைபெறத்துவங்கியது. இந்த மாநாட்டில் நிகழ்த்தப்படும் உரையே அதன் சிறப்பம்சமாக அமைந்தது. பேச்சாளர்கள் மணிக்கணக்கில் எல்லாம் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். 18 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக பேச வேண்டும். ஆனால், அதற்குள் தங்கள் வாழ்வனுபத்தை சாறாக பிழிந்து கொடுத்துவிடும் வகையில் உரைகள் அமைந்திருந்தது.

இதன் காரணமாக, இந்த மாநாட்டிற்கு என ஒரு ரசிகர் கூட்டம் உருவாகத்துவங்கியது. பல ஆண்டுகள் கனடாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில், பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மாநாடு நடத்தப்படலாயிற்று. புத்தாயிரமாண்டில், புகழ் பெற்ற பத்திரிகையாளரான சிறிஸ் ஆண்டர்சன், தனது நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்கால உரிமத்தை வாங்கினார். 2002 ல் இவரே மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

ஆண்டர்சன் வழிகாட்டுதலில் இந்த நிறுவனம் மேலும் பிரபலமானது. டி.இ.டீ உரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து 2006 ம் ஆண்டு இணையதளம் அமைக்கப்பட்டு, முதல் ஆறு மாநாட்டு உரைகள் பதிவேற்றப்பட்டன. அதன் பிறகு தொடர்ந்து நிகழ்ச்சிகளின் வீடியோ உரைகள் பதிவேற்றப்பட்டன.

இதனிடையே, டி.இ.டீ நிகழ்ச்சிகள் உலக அளவில் விரிவடைந்தன. ஆரம்பத்தில் மூன்று துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டதற்கு மாறாக, சமூகம், கலாச்சாரம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டனர். மேலும் உரிம அடிப்படையில், பதிவு செய்து கொண்ட அமைப்புகள் தங்கள் பகுதிகளில் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன. இவ்வாறு 100 நாடுகளுக்கும் மேல் இந்த கருத்தாக்கம் விரிவடைந்துள்ளது.

இதன் நேரடி நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை மீறி, எப்போதும் அரங்கு நிரம்பி வழியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட நேர வரம்புக்குள், துறை சார்ந்த வல்லுனர் ஒருவர் தனது வாழ்வனுபவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது இந்த நிகழ்ச்சிகளின் மையக்கருத்தாக தொடர்கிறது. இத்தகைய உரைகள் டி.இ.டீ தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ உரைகளை இந்த தளத்தில் அணுகலாம்.

தொழில்நுட்பம், வடிவமைப்பு, அறிவியல், புதுமையாக்கம், சமூக மாற்றம் என பல்வேறு தலைப்புகளில் இருந்து வீடியோ உரைகளை தேர்வு செய்யலாம். இவைத்தவிர முகப்பு பக்கத்தில் தனித்தலைப்புகளுடன் உரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உரைகளை கேட்பதோடு, அதன் எழுத்து வடிவத்தையும் அணுகலாம்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் முதல் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் வரை பல பிரமுகர்கள் நிகழ்த்திய உரைகளை கேட்கலாம்.

கொரோனா போன்ற பெருந்தொற்று பாதிப்பு பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னரே பில் கேட்ஸ் எச்சரித்துள்ள உரையும் இதில் அடங்கும். தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுன் தனது திரையிலக பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த உரைகளின் தன்மையை புரிந்து கொண்டால் நீங்களும் அவற்றின் ரசிகர்களாகி விடுவீர்கள். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த தளத்தில் சிறிது நேரத்தை செலவிட்டால், உங்கள் வாழ்க்கை பார்வையும் விசாலமாவதை உணரலாம்.

சர்வதேச விரிவாக்கத்தை அடுத்து இதன் செயல்பாடுகள் லேசான விமர்சனத்திற்கு உள்ளானாலும், இந்த தளத்தில் உள்ள உரைகளை வாழ்வனுபவத்தின் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

வீடியோ உரைகள் தவிர, புத்தகங்கள், தொகுப்புகள் என பல்வேறு அம்சங்களையும் கொண்டிருக்கிறது. உரைகளின் மொழியாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. தன்னார்வலர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர். நீங்கள் நிச்சயம் புக்மார்க் செய்து கொள்ள வேண்டிய இணையதளம். ; https://www.ted.com/

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *