செலவு குறைக்கும் ‘இல்லத்திலிருந்தே பணி’

செலவு குறைக்கும் ‘இல்லத்திலிருந்தே பணி’

கொரொனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு துறைகளும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. இதன் விளைவாக, நிறுவனங்கள் இயங்கும் முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டிருக்கின்றன. இதன்விளைவாக நிறுவனங்களின் பொருளாதாரத் திட்டமிடலிலும் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றவைப்பது அதில் ஒன்று.

 வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது நம்மவர்களுக்கு ஒரு புதிய அனுபவம் தான் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது எல்லா துறையினருக்கும் பழக்கப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. எந்தெந்த துறைகளிலெல்லாம் வீட்டிலிருந்தபடி வேலை செய்வதற்கு வாய்ப்பில்லை என்று நாம் கருதினோமோ,  அந்தந்தத் துறைகளில்கூட சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கூடுமானவரை வீட்டிலிருந்தே பணிசெய்ய ஊழியர்களைப் பழக்கப்படுத்தி வருவது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான்.
செலவு குறைகிறது
அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்துக்கு வர வைத்து நிறுவனத்தை நடத்துவது என்பது செலவு அதிகம் பிடிக்கும் விஷயமாக இருக்கிறது.  மாறாக, அனைவரும் தத்தம் வீடுகளிலிருந்து பணி செய்கிற பொழுது பல்வேறு விஷயங்களில் செலவைக் குறைக்க முடியும் என்பதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் உணர்ந்த உண்மையாகும்.
எடுத்துக்காட்டாக, 50 பேர் பணியாற்றக்கூடிய ஒரு நிறுவனத்தை வழக்கமான முறையில் நிர்வகிப்பதாக இருந்தால் அதில் ஏற்படும் செலவுகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.  முதலாவதாக ஊதியத்தை இந்த விஷயத்திலிருந்து கழித்துவிடுங்கள். ஒரு ஊழியர் எங்கிருந்து வேலை செய்தாலும் அவருக்குச் சம்பளத்தைக் கொடுத்தாக வேண்டும் என்பதால் அவையெல்லாம் நிலையான செலவுகள் என்பதாகப் புரிந்துகொள்ளலாம்.
மாறாக, குறைக்கக்கூடிய அல்லது தவிர்க்கக்கூடிய செலவுகள் என்று ஒரு பட்டியலே போடலாம். எடுத்துக்காட்டாகப் பெரிய நிறுவனங்கள் தங்களது மிகப்பெரிய அளவிலதான  அலுவலகங்களை காலி செய்துவிட்டு சிறிய அளவிலான அலுவலகங்களுக்கு தங்களை மாற்றிக் கொண்டுவிட்டனர். இதன் காரணமாக வாடகை செலவில் குறைந்தபட்சம் 50 விழுக்காட்டையாவது மிச்சம் பிடித்திருக்கின்றன.
Image by Steve Buissinne from Pixabay
சிறிய அலுவலகம்
பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அல்லது தகவல் தொடர்புக்கான அலுவலகம் என்பது சட்டப்படியானது என்பதால் சிறிய அளவிலான ஒரு அலுவலகமே போதுமானது என்ற முடிவுக்கு பல்வேறு துறையினரும் வந்துவிட்டனர்.  நிறுவனத்தின் செலவில் மிகப் பெரிய பங்கு என்றால் அது  வைக்கக்கூடிய வாடகைச் செலவுதான். எனவே,  இது, நிறுவனங்களுக்குப் பெரியதோர் ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
அதேபோல அனைத்து ஊழியர்களுக்கும் விரல் ரேகை பதிவு மூலமாக வருகைப் பதிவேட்டைப் பராமரிப்பது என்பது ஒரு பெரிய வேலை. அந்த சாதனத்தை, அதற்கான மென்பொருளைப் பராமரிப்பது, அதில் ஏற்படும் பழுதுகளைச் சரி செய்வது ஆகியவையும் முக்கியமான வேலைகள்தாம். இந்த சூழ்நிலையில் இணைய வழியாகவே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும்  முறையைக் கொண்டு வருவதால் இந்த வேலை மிச்சமாகிறது.
அதேபோல அலுவலக தூய்மைப்பணிக்கான செலவுகளும் தற்போது பெருமளவு குறைந்திருக்கின்றன.  ஐம்பது ஊழியர்கள் பணிபுரியக்கூடிய இடத்தில் குறைந்த பட்சம் இரண்டிலிருந்து மூன்று பேராவது அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட வேண்டிய தேவையிருக்கிறது.  அவர்களது ஊதியம் முழுக்க முழுக்க இன்றைய சூழலில் தவிர்க்கப்பட்டு விடுகிறது அல்லது குறைக்கப்படுகிறது.
மின்கட்டணம்
அதேபோல மின் கட்டணம் என்பது எந்த அலுவலகத்திற்கு மிகப் பெரிய சுமையாக இருக்கிற. 50 பேர் வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
  50 பேருடைய கணிப்பொறிக்கு ஆகும் மின் கட்டணம்,  சுமார் 10 மணி நேரம் அலுவலகத்தில் அனைத்து மின் விளக்குகளும் எரிய வேண்டிய தேவை இருப்பதால் அதனால் ஏற்படக்கூடிய மின் கட்டண செலவு,  குளிரூட்டும் இயந்திரங்கள் பெரிய அளவுக்கு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால் அவற்றுக்கான மின் கட்டண செலவு, இதனைப்பயன்படுத்தாத நிறுவனங்களில் மின்விசிறிகள் நாள் முழுவதும் இயங்குவதற்கான செலவு,  ஹவுஸ் கீப்பிங் உபகரண மின் பயன்பாடு,  கணிப்பொறி சார்ந்த நிறுவனங்களாக இருந்தால்  சர்வர் உள்ளிட்ட கருவிகளுக்கான மின் கட்டணம், இன்வெர்ட்டர்/ஜெனரேட்டர் பராமரிப்பு செலவு ஆகியவை மின் கட்டணத்தில் மிகப்பெரிய பங்கு வைக்கக் கூடியவை.
 இவை ஒருபுறமிருக்க,  சிறிய அளவிலான  அலுவலகத்துக்கு மாறுவதன் மூலமாகப் பாதுகாப்பு ஊழியர்களுக்கான செலவையும் பல நிறுவனங்கள் குறைத்திருக்கின்றன.
போக்குவரத்து செலவு
 அதேபோல ஊழியர்கள் அலுவலர்கள் குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருவதை  உறுதி செய்வதற்காகப் பல நிறுவனங்கள் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை வைத்து அவர்களை அழைத்து வருகின்றன. இந்த செலவு தற்போது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.  ஊழியர்களை அவரது சொந்த வாகனத்தில் வாரத்துக்கு ஒருமுறை வருமாறு சொல்லும்  நிறுவனங்களில்கூட, போக்குவரத்து செலவு ஊழியர்களையே சார்ந்ததாகிவிடுகிறது.
Image by Freedommail from Pixabay
போதுவாக,  போக்குவரத்து நெரிசல்,  விபத்துக்கள், வாகனப்பழுது  மற்றும் பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் அலுவலகத்துக்கு கால தாமதமாக வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.  இவ்வாறு எதிர்பாராது ஏற்படும் நிகழ்வுகள் கூட நிறுவனத்தின் உற்பத்தியைப்  பாதிக்கும்.  இது போன்ற சூழ்நிலைகளை  வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை முற்றிலுமாகத்  தவிர்த்து விடுகிறது.

 அதேபோல 100 பேர் பணியாற்றும் ஒரு நிறுவனத்தில் நாளொன்றுக்கு நூறு தேநீர் வழங்கும் இயந்திரங்கள் மூலம் தேநீர் வழங்கினால் கூட தினமும் குறைந்தபட்சம் ரூ.௧௮௦௦-2000  செலவாகிறது.  அந்த இயந்திரத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வதன்மூலம் ஒரு  தவிர்க்கமுடியாத செலவும் செய்யப்படுகிறது. ஊழியர்கள், வீட்டிலிருந்து பணி செய்வதன்மூலமாக, இந்த  செலவும் மிச்சமாகிறது.

அதிகரிக்கும் உற்பத்தி 
இல்லத்திலிருந்து  பணியாற்றுவது என்பது பெரிய அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதனையடுத்து தற்போது முழுக்க முழுக்க அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரியும் பாணிக்குயிலிருந்து, முற்றிலுமாக ‘இல்லத்திலிருந்தே பணி’ என்ற முறைக்கு மாறிவிடலாமா பல நிறுவனங்களும் யோசிக்கத் தொடங்கியுள்ளன.  ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
ஊழியர் ஒருவர் காலை  8 மணிக்குக் காலை உணவை முடித்துக் கொண்டு அடித்துப் பிடித்து 10 மணிக்கு அலுவலகத்துக்கு வருகிறார் என்று கொள்வோம்.  நிதானமாக  1௦.30க்கு வேலையைத் தொடங்கினார் என்றால் 11 அல்லது 12 மணிக்கு தேநீர் இடைவேளை வந்துவிடும்.
மதியம் இரண்டு மணிக்கு உணவு இடைவேளை குறுக்கிடும். மாலை ஒரு சிறிய தேநீர் இடைவேளை….இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் உற்பத்தி எந்த அளவுக்குக் குறைவாக நடக்கிறது என்பது புரியும்.
இவையெல்லாம் சட்டப்பூர்வ உரிமைகள்தாம் என்றாலும் உற்பத்தி மீது தாக்கம் ஏற்படுத்தும் காரணிகள் என்பதில் ஐயத்துக்கு  இடமில்லை. அதேநேரத்தில், வீட்டிலிருந்து பணி என்ற மாதிரியைப் பார்ப்போம். ஒருவேளை  அவசரப்  பணி ஏதும்  இருந்தால் காலையில் 5-  6 மணிக்கு எழுந்து தனது வேலையை முடித்துவிட்டுத் தான் ஊழியர் தனது நாளையே தொடங்குகின்றார்.
அதேபோல இரவு நேரங்களிலும் வேலை சுமையைத் தவிர்க்க கூடுதலாக உழைக்கிறார். இதன்மூலம் குடும்ப நேரத்தையும் போதுமான அளவுக்கு எடுத்துக்கொண்டு சமன் செய்துவிடுகிறார்.
Image by Elf-Moondance from Pixabay
அதாவது, வேலையைப் பொறுத்துத்தான் வேலை நேரமே தவிர, நேரத்தை மையமாக வைத்து வேலை நடப்பதில்லை. இதன்மூலம்  ஊழியரின் பணிச்சுமை கூடியிருக்கிறது. உற்பத்தியும் கூடியிருக்கிறது. சேவைத்துறையில் வீட்டிலிருந்தே பணி என்பது பெருமளவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், உற்பத்தித்துறை நிறுவனங்களால் இதனைச் செய்ய முடியாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.
எது எப்படி இருப்பினும், இன்றைய சூழலைப் புரிந்துகொண்டு தங்களுக்கு சாதகமாக அதனை ஆக்க நிறுவனங்கள் முயல்கின்றன. ஊழியர்களும் இந்த மாற்றங்களைத் தங்களுக்கு இயைந்த வழியில் பயன்படுத்திக்கொண்டு அலுவலக வாழ்க்கை-குடும்ப வாழ்க்கை ஆகியவற்றைச் சமன் செய்துகொண்டாகவேண்டும்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *