கைகொடுக்கும் முடிஏற்றுமதித் தொழில்

கைகொடுக்கும் முடிஏற்றுமதித் தொழில்

எந்தக் கதவைத் தட்டினால் எந்தக் கதவு திறக்கும் என்று யாருக்குத் தெரியும்?என்கிற சொலவடை ஒன்று உண்டு. உண்மைதான்.திரும்பிய பக்கமெல்லாம் ஏதேனும் ஒரு தொழில்வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை தேடிக் கண்டுபிடிப்பதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது.

அந்த வகையில் புதிதாகத் தொழில்செய்ய முனைவோருக்கு கைகொடுக்கும் ஒரு தொழில்தான் முடி ஏற்றுமதித் தொழில்.

இந்தத் தொழிலுக்கு உலக நாடுகள் மத்தியில் கடும் தேவை இருக்கிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு இயற்கைக் கூந்தலின் தேவை அதிக அளவில் இருக்கிறது.

பெண்கள் தங்களுடைய கூந்தலை நீளமாகக் காட்டிக் கொள்ளவும்,விதவிதமாக விக்-களைப்(WIG) பயன்படுத்தவும் மிகவும் விரும்புகின்றனர். செயற்கைக் கூந்தலைப் பயன்படுத்தினால் ஒருவித அந்நியத்தன்மை இருப்பதால் இயற்கைக் கூந்தலே அவர்களது தேர்வாக இருக்கிறது. சிகை அலங்காரம்,அழகுப் பொருட்கள் சார்ந்த தொழில் அங்கே எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும்.

இதனாலேயே பல உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு முடி ஏற்றுமதியை செய்துவருகின்றன. அப்படி முடி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவுக்கும் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. குறிப்பாக ஒவ்வொரு வருடமும் நானூறு மில்லியன் டாலர் மதிப்பிலான முடி இந்தியாவிலருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.

அதுமட்டுமல்ல இந்தியாவிலிருந்து பெண்களின் கூந்தல்தான் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கூட நம் நாட்டிலிருந்து முடி ஏற்றுமதி நடக்கிறது.

குறிப்பாக கோவில்களில் பிரார்த்தனை சார்ந்து பெண்கள் தங்கள் தலைமுடியைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள் இல்லையா! இதுபோன்ற முடி ஒன்றாகச் சேகரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு உயர்தரமான கூந்தலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிரார்த்தனை மூலம் கிடைக்கப்பெறும் முடி ஒருபுறம் என்றால் நம் இந்தியப் பெண்களில் நிறையப் பேர் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காக தங்கள் கூந்தலை தானம் செய்கின்றனர். இப்படிப்பட்ட உயர்ந்த நோக்கங்களுக்காகவும் நம் இந்தியாவிலிருந்து முடி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்ல, உலக சந்தையில் நம்முடைய இந்தியப் பெண்களின் கூந்தலுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. ஏனென்றால் இந்தியப் பெண்களின் கூந்தல் இயற்கையாகவே வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால் உலக நாடுகள் இந்தியாவிலிருந்து முடியை இறக்குமதி செய்ய விரும்புகின்றன.

இந்தியாவைப்போலவே சீனாவிலிருந்தும் அதிக அளவில் முடி ஏற்றுமதி நடக்கிறது. அதுமட்டுமல்ல, இப்படி பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட முடியை முறைப்படி சுத்தம் செய்து ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் வைக்க உதவும் தொழிற்சாலை களும் இந்தியாவில் பெருக ஆரம்பித்திருக்கின்றன. இதன் மூலமும் நிறையத் தொழில்முனைவோர் இந்தியாவில் உருவாகத் தொடங்கியிருக்கின்றனர்.

-திருமாமகள்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.