புழு வளர்த்தால் ஃபுல் வருமானம்!

புழு வளர்த்தால் ஃபுல் வருமானம்!

“புழு மாதிரி என்னை கேவலமா நினைக்காத…..” என்கிற வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. ஆனால் புழுவை குறிப்பாக மண்புழுவை ஒருபோதும் ஏளனம் செய்து விடாதீர்கள். மண்புழுவால் ஆயிரங்களைக் குவிக்கிறவர்கள் தமிழகத்திலேயே பலர் இருக்கின்றனர்.

 

மண்புழு மண்ணின் ஆதாரம். விவசாயியின் நண்பன். மண்புழு மண்ணின் வலிமையை அதிகப்படுத்துகிறது. மண்புழு உரத்தை விவசாயத்திற்காகப் பயன்படுத்தும்போது மண்ணின் வளம் அதிகமாகி நச்சுக்கலப்பில்லாத விளைபொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல, விளைபொருட்களின் விளைச்சலும் அமோகமாக இருக்கும்.

 

இத்தனை நன்மைகள் கிடைப்பதாலேயே  மண்புழு உரத்தை இயற்கை முறையில் தயாரித்து அதை விற்பனை செய்வதும் தற்போது பிரபலமாகிக்கொண்டிருக்கிறது.

விவசாயம் செய்பவர்கள் மட்டும் மண்புழு உரத்தைப் பயன்படுத்துவதில்லை…தோட்டங்கள்,மாடித்தோட்டங்கள்,பண்ணை வீடுகளில் காய்கறிகள் பயிரிடுவது என்று எல்லாவற்றுக்குமே மண்புழு உரம் பயன்படுவதால் மண்புழு உரம் தயாரித்து விற்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது.

எப்படித் தயாரிக்கப்படுகிறது?

மாட்டு சாணம், மக்கும் விவசாய கழிவு, காய்கறி மற்றும் பயிர் கழிவுகளை மண்புழு உண்ணும். பிறகு மண்புழு கழிவுகளை வெளியிடும். மண்புழுவின் இந்தக் கழிவுகள்தான் உரம். இந்த உரத்தில்  விவசாய பயிர் வளர தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன.

காய்கறிக் கழிவுகள் இருந்தால் போதும்!

ஒவ்வொருவர் வீட்டிலும் காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் தினம் தினம் நிறையவே கிடைக்கின்றன. தூக்கி எறியப்படும் இந்தக் கழிவுகளை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

 

 

‘வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம்  நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு  நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது.

மண்புழு உரத்தின் மகிமை இத்துடன் முடிந்து போய்விடவில்லை. விவசாயத்திற்கும், தரிசுநில மேம்பாட்டுக்கும் மிகவும் பயன்படக்கூடியது இந்த மண்புழு உரம். மாடித்தோட்டம்,வீட்டுத் தோட்டத்திற்கு மட்டுமன்றி நஞ்சை நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் மண்புழு உரத்தைப் பயன்படுத்தி நல்ல விளைச்சலைக் காண முடியும்.

 

வீடுகளில் கோழிகள் வளர்ப்பவர்கள் அவற்றுக்கு உணவாக மண்புழுவைத்தான் போடுகிறார்கள். விலையுயர்ந்த மீன் குஞ்சுகளை வளர்ப்பவர்களும் மண்புழுவைத்தான் அதற்கான உணவாக நினைக்கிறார்கள். எனவே மண்புழு உரம் தயாரிக்கும் தொழிலுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது.

நகரத்திலும் செய்யலாம்!

இந்தத் தொழிலை ஆரம்பிக்க குறைந்தபட்சம் ஐநூறு சதுர அடி இடம் தேவைப்படும். கிராமப்புறங்களில் இந்தத் தொழிலை  ஆரம்பிக்க நினைப்பவர்கள் தங்களது தோட்டத்திலேயே மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம்.

கிராமத்தில் தொழில் செய்யும் சூழ்நிலை எங்களுக்கு இல்லை என்று சொல்பவர்கள் நகரங்களிலேயே மொட்டை மாடியில், மேல் சுவர் கெடாதபடி பிளாஸ்டிக் விரிப்புப்  போட்டு அதன் மீது இந்த மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

குறைந்தளவு முதலீட்டில் புதிதாக தொழில்  செய்ய நினைப்பவர்கள் இத்தொழிலில் தாரளமாக இறங்கலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.  ரூ.60 ஆயிரம் அளவுக்கு முதலீடு செய்தால் போதும், ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் மண் புழு உரம் தயாரிக்க முடியும் என்கின்றனர்.

தொழில் தொடங்க மானியமும்  உண்டு!

அதுமட்டுமல்ல, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமான “பிரைம் மினிஸ்டர்ஸ் எம்ப்ளாய்மெண்ட் ஜெனரேஷன் புரோகிராம்(prime minister’s  employment  generation programme-PMEGP) திட்டத்தின் கீழ் இந்தத் தொழிலைத் தொடங்க 35% மானியத்துடன் கடனுதவியையும் பெறலாம்.

-ஜெயலட்சுமி.

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.