வங்கி மேலாளரிடம் எப்படிப் பேச வேண்டும்?

வங்கிக்கடன் பெற  விரும்புவோருக்கு உதவும் 14 முக்கிய யோசனைகள்!

 

 

 

 

சிறு தொழில் செய்வதற்காக வங்கிக் கடன் பெறவேண்டி வங்கிக்குச் செல்ல இருக்கிறீர்களா? இதோ, உங்களுக்காக சில டிப்ஸ்!

 

1.முதலில் உங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்துங்கள். கலைந்த முடி, அழுக்கான-கலைந்த உடை என்று செல்லாமல்,சுத்தமாக  உடையணிந்து கண்ணியமான தோற்றத்துடன் வங்கி மேலாளரைச் சந்தியுங்கள்.

 

handshake-2056023_640

2.கையில் தயாராக ஒரு நோட்டு அல்லது நாட்குறிப்பு, எழுதும் நிலையில் உள்ள பேனா ஆகிய இரண்டும் இருப்பது அவசியம். அப்போதுதான் கடனுக்காக கேட்கப்படும் விபரங்களைக் குறித்துக்கொள்ளவோ, விண்ணப்பம் எழுதித் தரவோ முடியும்.

 

 

 

3.குறிப்பாக வங்கிச்சேவை நேரத்தில் கடன் குறித்துப் பேசுவதற்காக மேலாளரை சந்திக்க முயற்சி செய்யாதீர்கள். மதிய உணவுக்குப் பிறகான நேரத்தில் மேலாளரை சந்தித்தால்,அவர் சற்று ரிலாக்ஸான மனநிலையில் இருப்பார். உங்களையும்  அமரவைத்துப் பேசுவார். குறிப்பாக,நீங்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்பார்.

 

 

4.வங்கி மேலாளரிடம் பேசும்பொழுது உங்களது உடல்மொழி மரியாதைக்கு உரியதாக இருக்க வேண்டியது மிக அவசியம். நகத்தை கடித்தபடி,அல்லது கால்களை ஆட்டியபடி பரபரவென பேசக் கூடாது. மிகக் குறிப்பாக,லோன் கிடைத்தே ஆகவேண்டும் என்பது போன்ற அவசரம் உங்கள் முகத்தில் தெரியக் கூடாது. (என்ன,இந்த மனிதர் லோனுக்கு இப்படிப் பறக்கிறார்! ஒருவேளை வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்டால்?” என்று அவர் நினைத்துவிடக் கூடாது.)

 

5.நீங்கள் என்ன மாதிரியான தொழில் செய்யப் போகிறீர்கள் என்று மேலாளர் கேட்டால்,உடனே நீங்கள் செய்ய இருக்கும் தொழில் குறித்து அப்படி இப்படி என்று, மிகைப்படுத்திப் பேசக் கூடாது.

 

consistencyஅதே சமயத்தில் தன்னம்பிக்கை குறையாமல் நீங்கள் செய்யவிருக்கும் தொழில் குறித்துப் பேச வேண்டும்.

 

அதுமட்டுமல்ல, தொழிலை ஆரம்பித்து எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறோம்,தொழில்  ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில்  தோராயமாக எவ்வளவு வருமானம் கிடைக்கும்,என்பது போன்றவற்றைக் குழப்பமில்லாமல் தெளிவாகப் பேச வேண்டும்.

 

 

6.பேசுவது மட்டுமில்லாமல்,உங்கள் தொழில் குறித்த அத்தனை தகவல்களையும் கோப்புகளாகவோ, மின்னணுக் கோப்புகளாகவோ  கொண்டுபோகவேண்டியது முக்கியம். ஏனென்றால்,நீங்கள் கேட்கும் கடன் தொகைக்கும்,நீங்கள் ஆரம்பிக்க நினைக்கும் தொழிலுக்கும் பொருத்தம் சரியாக இருக்குமா என்று மேலாளர் யோசிப்பார்.அப்போது,அவரின் இந்த சந்தேகத்தைப் போக்க உங்களின் தெளிவான  ஆவணங்கள் கைகொடுக்கும்.

 

 

7.அதுமட்டுமல்ல, உங்களது மாத வருமானம் குறித்த தெளிவான தகவல்களை வங்கி மேலாளருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் உங்களால் கடன்தொகையை சரியாகக் கட்டமுடியுமா என்பதுகுறித்த முடிவுக்கும் வங்கி மேலாளர் வருவார்.

 

bank

8.தொழிற்கடன் கிடைக்கவேண்டும் என்பதற்காகப் பொய் பேசவே கூடாது. உங்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்பாக,நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வந்து வங்கி அலுவலர்கள் உங்களைப் பற்றி  விசாரணை நடத்துவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

 

9.எல்லாவற்றுக்கும் மேலாக,நீங்கள் எந்த வங்கியை கடனுக்காக அணுகுகிறீர்களோ,அந்த வங்கியில் குறைந்தது இரண்டு ஆண்டுகளாகவது நீங்கள் கணக்கு வைத்திருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக வங்கி மேலாளரை சந்திக்கும்பொழுது, அந்த வங்கிக்கான உங்கள் பாஸ்புக்கை மறக்காமல் எடுத்துச் செல்லவேண்டும். ஏனென்றால்,உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச பேலன்ஸ் தொகையை தொடர்ந்து வைத்திருக்கிறீர்களா என்பதைத்தான் வங்கி மேலாளர் முதலில் கவனிப்பார்.

 

10.கூடவே கடந்த கடந்த இரண்டு ஆண்டுகளில்,உங்கள் வங்கிக் கணக்கில் உங்களது பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களும் ஆராயப்படும்.குறிப்பாக, நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு பணத்தை உங்கள் கணக்கில் போட்டிருக்கிறீர்கள்,எவ்வளவு பணத்தை எடுத்திருக்கிறீர்கள்? தற்பொழுது உங்கள் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பன போன்ற தகவல்களையும் வங்கி மேலாளர் கவனிப்பார்.

 

11.அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு அந்த வங்கியில் நிலை வைப்புகள் (Fixed Deposit) எதுவும் இருக்கிறதா என்பதையும் மேலாளர் கேட்பார். எனவே அது குறித்த தகவல்களையும் கையோடு எடுத்துச் செல்வது நலம்.

 

 

12.நீங்கள் அந்தக் குறிப்பிட்ட வங்கியின் நீண்டகால வாடிக்கையாளராக இருக்கும்பட்சத்தில் உங்களது நாணயத் தன்மையையும் வங்கி மேலாளர் கண்டறிய முனைவார்.

குறிப்பாக,அந்த வங்கியில் நீங்கள் நகைக்கடன் போன்றவற்றைப் பெற்றிருந்தால்,அதை சரியாக அடைத்தீர்களா அல்லது நகைக்கடனுக்கான வட்டியை ஒழுங்கான முறையில் கட்டிவருகிறீர்களா என்பது குறித்தும் மேலாளர் கவனிப்பார். ”இந்த மனிதரை நம்பிக் கடன் கொடுக்கலாம்” என்entrepreneur-1340649_640று அவர் ஒரு முடிவுக்கு வர, உங்களின் முந்தைய நாணயமான செயல்பாடுகள் உதவும்.

 

13.எவ்வளவு முடியுமோ அவ்வளவு சான்றுகளைக் கையோடு எடுத்துச்செல்வது முக்கியம் (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றையும் எடுத்துச் செல்வது அவசியம். ஏனென்றால்,மேலாளர் திடீரென்று இருப்பிடச் சான்று/அடையாளச் சான்று ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால், ”ஹி…ஹி…வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டேன்” என்று அவரிடம் தலை சொறிய வேண்டிய நிலை வரலாம். அதைத் தவிர்த்துவிடவேண்டும்.

business-2409456_640

14.இவை எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் ‘நாம் என்ன செய்ய இருக்கிறோம் என்பதை நாம் தெளிவாக அறிந்திருப்பது’. நீங்கள் செய்ய விரும்பும் தொழில் குறித்து அக்குவேறு ஆணிவேறாக அறிந்துவைத்திருப்பது முக்கியம்.

 

நீங்கள் என்ன செய்ய இருக்கிறீர்கள், போட்டியாளர்கள் யார், கடனுதவி கிடைத்தால் என்னவெல்லாம் செலவு செய்வீர்கள், எவ்வளவு சொத்துக்களை உங்கள் தொழிலுக்காக வாங்குவீர்கள், விரிவாக்கத் திட்டம் என்ன என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் மேலாளரிடமிருந்துவரும். இவற்றுக்கெல்லாம் விரிவான அளவில் விடைகளைத் தெரிந்துவைத்துக்கொண்டு வங்கி மேலாளரின் அறைக்கதவைத் தட்டுவதே புத்திசாலித்தனம்.

-சு.கவிதா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *