இளம்பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கு!

இளம்பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கு!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதிலும் இயங்கிவரும்  தொழில்நுட்ப நிறுவனம் “ஜெனிசிஸ்” (Genesys).

அமெரிக்காவைத் தவிர கனடா, ஐரோப்பா , ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற உலகத்தின் பல பகுதிகளில் இந்த நிறுவனம் வியாபித்திருக்கிறது. இந்தியாவில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன.  

குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனம் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தங்களது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்துக்கொள்வதென்பது இயலாத காரியம்.

எனவே இதற்கு பதிலாக கிளவுட் கம்ப்யூட்டிங் (cloud computing) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம் வழியாக தகவல்களை சேமிக்கவும் பயன்படுத்தவும் முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் ஜெனிசிஸ் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் டி.சி.எஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்கை, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் பிபிஒ, ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு ‘ஜெனிசிஸ்’ நிறுவனம் மேற்சொன்ன கிளவுட் கம்ப்யூட்டிங் பணியை செய்து கொடுக்கிறது. இதுதவிர தினந்தோறும் நூறு நாடுகளில் இருக்கின்ற 11,000 நிறுவனங்கள் ஜெனிசிஸ் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றன.   

 ஸ்கைப் உட்பட பல முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த டோனி பேட்ஸ், ஜெனிசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்

இந்நிலையில் இந்தியாவில் தனது ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக டோனி பேட்ஸ் முதன் முதலாக நவம்பர்  19 அன்று சென்னை வந்தார். வந்த சூட்டோடு செய்தியாளர்களையும் அவர் சந்தித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தனது முதல் இந்தியப் பயணம் இது என்றும் தெரிவித்தார்.

தன்னுடைய நிறுவனக் கிளைகளில் சென்னையில்தான்  அதிக அளவு ஊழியர்கள் பணிபுரிவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஊழியர்கள் அழுத்தமின்றிப் பணிபுரிவதற்காக சகல வசதிகளுடன் கூடிய பெரிய அலுவலகம், தரமான உணவகம் என்று பார்த்துப் பார்த்து சென்னை அலுவலகத்தை உருவாக்கியிருப்பதாகவும் சென்னை கிளையின்   வடிவமைப்பு தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதன் காரணமாக ’பணியாற்ற உகந்த இடம்” என்கிற பெருமையை சென்னையிலிருக்கும் ஜெனிசிஸ் நிறுவனக் கிளை  தொடர்ந்து சில வருடங்களாகப் பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் ஜெனிசிஸ் நிறுவனத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அவர், இது சார்ந்த மிக முக்கியத் தகவலையும் வெளியிட்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் டோனி பேட்ஸ்

அதாவது இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் உடன்படிக்கை செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், வருடந்தோறும் பொறியியல் படித்து முடித்து வெளியேவரும்  இளம் மென்பொறியாளர்களுக்கு தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கி அதன்மூலம் தங்களது தொழிலை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

இனி உலகத்தின் ஒட்டுமொத்த எதிர்காலமும் “ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்” (Artificial Intelligence) எனப்படும் செயற்கை அறிவாற்றலை நம்பியே இருக்கிறது. எனவே இந்தத் தொழில்நுட்பத்தைப் அடிப்படையாகக் கொண்ட சேவைகளைத் தருவதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் அதிகமாகப் பெற்று தொழிலையும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவுபடுத்தவேண்டும் என்பதே தங்களது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது என்றும் டோனி பேட்ஸ் தெரிவித்தார். 

– பாலாஜி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.