எப்படி ஜெயித்தார்கள்?

எப்படி ஜெயித்தார்கள்?

தொழில்முனைவோருக்கு வாசிப்பு பழக்கம் என்பது மிகமிக முக்கியமானது. பொது அறிவை வளர்த்துக் கொள்ள எந்த அளவுக்கு செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, இணைய தளங்களைப் பயன்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் நூல்களைப் படிக்கும் பழக்கத்தை தொழில்முனைவோர் கைக்கொள்ள வேண்டும்.

அரசியல் செய்திகள், பரபரப்புச் செய்திகள், திரைத்துறை சார்ந்த செய்திகள், குற்றச் சம்பவங்கள் குறித்த செய்திகள் ஆகியவற்றை மிக இயல்பாகவே மனது நாடிச் செல்லும். இவை எல்லோரும் செய்யக்கூடியவை தாம். ஆனால் ஒரு தொழில் முனைவோர் இவற்றால் நேரடியாக பயன் பெறுவாரா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

படிக்க வேண்டியவை

அப்படியானால் தொழில்முனைவோர் எப்படிப்பட்ட நூல்களைப் படிக்க வேண்டும்? தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய நூல்கள்,  வெற்றிபெற்ற தொழில் முனைவோரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள், மேலாண்மைத் தத்துவங்கள், இறக்குமதி – ஏற்றுமதி தொடர்பான வாய்ப்புகளைச் சொல்லும் நூல்கள்,  சிந்தனையைத் தூண்டும் நூல்கள் ஆகியவற்றை தொழில்முனைவோர் அவசியம் படிக்க வேண்டும்.

இது, தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வதுடன் தொழிலையும் வளர்த்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அந்த அடிப்படையில் இப்பகுதியில் தொடர்ச்சியாக நூல் அறிமுகத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது  முனைவு.

அந்த வகையில் புதிய தலைமுறை பதிப்பகம் வெளியிட்டுள்ள ’எப்படி ஜெயித்தார்கள்?’ என்ற நூலை இங்கு பார்க்கலாம். ரமணன் அவர்கள் எழுதிய இந்நூலில் 8 நிறுவனங்களின் வெற்றிக்கதைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல்,  ராம்ராஜ் காட்டன், கேபிஎன் டிராவல்ஸ், அருண் ஐஸ் கிரீம், சவேரா ஹோட்டல், ஆச்சி மசாலா, சுகுணா சிக்கன் ஆகிய நிறுவனங்கள்தாம் அவை.

வெற்றிச் சூத்திரங்கள்

ஒவ்வொரு வெற்றிக் கதையின் தொடக்கத்திலும்  அந்த வெற்றி பெற்ற தொழில் முனைவோர் எப்படி வென்றனர் என்பதை ரத்தினச் சுருக்கமாக ’ஃபார்முலா’ என்ற பெயரில் நூலாசிரியர் கொடுத்திருக்கிறார்.

எடுத்துக்காட்டாக, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணனைப் பற்றி எழுதும் பொழுது அவரது வெற்றி சூத்திரமாக சில விஷயங்களை குறிப்பிடுகிறார்.

 

*தரம் சுவை தவிர கடைக்கு உள்ள அலங்காரமும் அவசியம்.

*டிமாண்ட் அதிகமாக கூடுதல் உற்பத்தியின் போது தரம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*மூலப்பொருள் அளிப்போருக்கும் ஊழியர்களுக்கும் பாக்கி வைக்காதீர்கள்.

*சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சமூகப் பணிகளுக்காக செலவிடுங்கள்.

*காலாவதியான பொருளை ஏமாந்த வாடிக்கையாளரின் தலையில் கட்டாதீர்கள்.

*தயாரிப்பு ஃபார்முலாவை ரகசியமாக வைத்திருங்கள்.

 

அதேபோல யுனிவர்செ நிறுவனத்தின் தலைவர் திரு.சதீஷ் பாபுவின் வெற்றி சூத்திரம்  சுவையானதாக இருக்கிறது. ’எதையும் புதிதாக முனையுங்கள். போட்டி இல்லாததால் வெற்றி எளிதாகும்’  என்கிறார் அவர்.

 

குறை கூறாதீர்கள்

நம் அனைவருக்கும் தெரிந்த ’ராம்ராஜ்’ நிறுவனத்தின் தலைவர் நாகராஜ் அவர்களைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இதில் இடம்பெற்றிருக்கிறது. அதில் திரு. நாகராஜ் அவர்களின் வெற்றி சூத்திரமாக இவற்றைக் குறிப்பிடுகிறார்:

*நீங்கள் முன்பு பணியாற்றிய நிறுவனங்களைக் குறை கூறாதீர்கள். நன்றியுடன் பாராட்டுங்கள்.

* கையில் பணம் கொடுத்தால் மட்டுமே  தொழில் செய்யுங்கள். கடன் அன்பை மட்டும் அல்ல, நம் தொழிலையும் முடக்கிவிடும்.

*அடுத்தவர் வற்புறுத்தலுக்காக உங்கள் முடிவை மாற்றாதீர்கள்.

*அன்றே முடிவெடுங்கள் அப்போதே ஆரம்பியுங்கள்.

 

நீங்களும் ஒரு தொழிலாளி

கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. கே .பி .நடராஜன் அவர்களின் வெற்றி சூத்திரமாக சொல்லும் பல விஷயங்களில் இது நிச்சயம் உங்களை கவரும்:

‘உங்கள் நிறுவனத்தில் நீங்களும் ஒரு தொழிலாளியாக இருங்கள்’ என்பதுதான் அது.

அருண் ஐஸ் கிரீம் நிறுவனத்தின் தலைவர் திரு.சந்திரமோகனின் வெற்றிச் சூத்திரம் என்னவென்று பாருங்கள்:

‘ இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்; விளம்பரங்களில் புதிய உத்திகளை புகுத்துங்கள். அதேபோல அதிகம் போட்டி இல்லாத இடத்தில் இருந்து ஆரம்பியுங்கள்’.

 

புதிய பாதையில் பயணியுங்கள்

சந்திரமோகன் தனது வாழ்க்கையை விவரிக்கும்பொழுது யாரும் போட்டி இல்லாத இடத்தில் தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு உத்தியை கண்டுபிடித்ததை நினைவு கூர்கிறார். ”வெளிநாட்டுக் கப்பல்கள் நமது துறைமுகத்துக்கு வரும்போது கப்பல் ஊழியர்களுக்காக பொருட்களை இங்கே வாங்குவார்கள். அவர்களுக்கு ஐஸ்கிரீம் தேவைப்படும். அவர்களைக் குறிவைத்து, அந்த சந்தையைப் பிடித்தேன்” என்கிறார்.

சவேராவின் சூத்திரம் என்ன தெரியுமா?

சவேரா ஹோட்டலில் உரிமையாளர் நீனா ரெட்டி, “போட்டியாளர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள். இக்கட்டில் அவர்களது உதவியும் தேவைப்படலாம்” என்கிறார் இந்நூலில்.  முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான பாடமாக இது இருக்கிறது.

பெயர் முக்கியம்

உலகம் அறிந்த ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் திரு. பத்மசிங் ஐசக், “ மார்க்கெட்டிங் துறையில் பட்டம் பெற்றவர்களை விட அனுபவம் நிறைந்தவர்களால் எளிதில் ஜெயிக்க முடியும் “ என்கிறார்.  எந்த நிறுவனத்தின் பெயரையும் தேர்ந்தெடுக்கும் முன் மிகவும் கவனமாக, எளிதில் மக்களால் பயன்படுத்தக் கூடிய வகையிலான பெயர்களைச் சூட்ட வேண்டும் என்கிறார். அந்த வகையில் ’ஆச்சி’ என்ற பெயரை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்ததைக் குறிப்பிடுகிறார்.

 

மாற்றி யோசியுங்கள்

சுகுணா சிக்கன் நிறுவனத்தின் தலைவர் சௌந்தர்ராஜன், “உங்கள் நிறுவனத்துக்கான மூலப் பொருட்களையும் நீங்களே உற்பத்தி செய்யுங்கள்” என்கிறார். அவரது நிறுவனம் தனது கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான கோழித் தீவனத்தையும் தானே உற்பத்தி செய்கிறது என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

‘எப்படி ஜெயித்தார்கள்?’ என்ற நூல் சிறிய நூலாக இருந்தாலும் இதில் பல்வேறு வெற்றிச் சூத்திரங்களும் அனுபவங்களும் அந்தந்த தொழில் முனைவோரின்  அவர்களின் குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதால் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்த நூலுடன் விரைவில் சந்திப்போம்!

-விஜி.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *