கவிதா நரசிம்மன்: ஆன்லைனைக் கலக்கும் பெண் சிங்கம்

கவிதா நரசிம்மன்: ஆன்லைனைக் கலக்கும் பெண் சிங்கம்

“எல்லோரும் போகின்ற அதே பாதையில் பயணம் செய்வதை நான் விரும்பவில்லை. எனக்கான பாதையை நானே உருவாக்கி என்னுடைய பயணத்தை தனித்துவமானதாக மாற்ற விரும்பினேன்.

அதனாலேயே மென்பொருள் துறையில் வேலை, கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை இவற்றை விட்டு விலகி சமூகத் தொழில்முனைவோராக என்னை நிலை நிறுத்திக் கொண்டேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த கவிதா நரசிம்மன்.

 

கிராமப் பகுதிகளில் இருக்கும் படிப்பறிவில்லாத, அல்லது அதிகம் படிக்காத பெண்கள், வாழ்வாதாரம் தேடும் மாற்றுத்திறனாளிகள், தன்னை சுற்றி நடக்கின்ற எந்த விஷயம் குறித்தும் உணர இயலாத மனநலம் குன்றியவர்களை இணைத்துக்கொண்டு  மெட்ராஸ்4 என்டர்பிரைசஸ் (Madras4 Enterprises) என்கிற ஆன்லைன் தொழில் நிறுவனத்தை இவர்  நடத்தி வருகிறார்.

 

பருத்தியாலான கைப்பைகள், பருத்தியாலான உள்பாவாடைகள், கைத்தறி புடவைகள், துணிகள் மூலம் செய்யப்படும் அணிமணிகள், பருத்தியாலான சானிட்டரி நாப்கின்கள், கொட்டாங்கச்சித் துண்டுகளால் செய்யப்படும் விளையாட்டுப்பொருட்கள் என்று நுகர்வோருக்குத் தேவையான பல முக்கியப் பொருட்களை தனது நிறுவனத்தின் மூலம்  தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கவிதா.

 

மென்பொருள் துறையில் பணிபுரிந்த   ஒரு பெண்மணி, இப்படி  சமூகத் தொழில்முனைவோராக மாறியது எப்படி என்று அவரிடமே கேட்டோம்….

“சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறுவயது முதலே தன்னார்வ சேவைகளில் ஈடுபாடு அதிகம். வளர்ந்தபிறகு  பொருளாதாரம் படித்துவிட்டு ஒரு மென்பொருள் நிறுவனத்தில்   மென்பொறியாளாராக  ஏழு வருடங்கள் பணியாற்றினேன். அதன் பின்னர் குடும்பத்துடன் ஏற்காடு சென்று செட்டில் ஆகும் சூழ்நிலை எனக்கு வந்தது. 

அங்கே ஐந்து ஆண்டுகள் உணவகம் நடத்தும் வாய்ப்பும்  எனக்கு கிடைத்தது. ஒரு பக்கம் உணவகத்  தொழிலில் கவனம் செலுத்தினாலும் மறுபக்கம் ஏற்காட்டில் உள்ள எளிய பின்னணி உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற சமூக அக்கறை சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தி வந்தேன்.” என்பவர் அதன்பிறகு கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக  தன் இரண்டு குழந்தைகளுடன் சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

“இங்கே வந்தபிறகு மறுபடியும் மென்பொருள் துறைக்கு செல்வதை என் மனம் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறன் கொண்ட  குழந்தைகள்மீது எனக்கு எப்போதுமே மிகுந்த அன்பு உண்டு.

எனவே அந்த குழந்தைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் சிலகாலம் பணியாற்றினேன். இது தவிர  நண்பர் ஒருவருடன் இணைந்து முதியோருக்கு  நியாயமான விலையில் தரமான உணவு சேவையை அளிக்கும் வேலையையும் கையில் எடுத்து செய்ய ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் என் குழந்தைகள் விருப்பப்படுகிற வாழ்க்கைமுறையை என்னால் அமைத்துக்கொடுக்க முடியவில்லை.அதனால் அவர்களது விருப்பப்படி அவர்களை அவர்களது தந்தையிடம் அனுப்பிவைத்தேன்.

அதன்பிறகுதான்  நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கை நமக்காக மட்டுமல்லாமல் எளிய  மக்களுக்காகவும் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.  அப்போது முதல்  சமூகத்தொழில் முனைவோராக  அவதாரமெடுத்தேன்” என்று தான் இந்தத் துறை வந்ததன் காரணம் சொல்கிறார் கவிதா.

“சூழலுக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் கெடுதல் விளைவிக்கும்  பிளாஸ்டிக் என்னும் அரக்கனை வேருடன் அறுக்க உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த பிளாஸ்டிக்கை ஒழிக்க நானும் என்னுடைய பங்கை ஆற்ற முடிவுசெய்தேன்.  எனவே பிளாஸ்டிக் கலப்பு அறவே இல்லாத பொருட்களை தயாரித்து விற்பனை  செய்யும் ஆன்லைன் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தேன். 

என்னுடைய நிறுவனத்தின் ஊழியர்களாக கிராமப்பகுதிகளில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளையும், எழுதப்படிக்கத் தெரியாத அல்லது குறைந்த கல்வித்தகுதி கொண்ட பெண்களையும் நியமித்தேன்.

பொதுவாக, கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள், படிப்பறிவற்ற பெண்கள் ஆகியோர்  ஏதேனும் ஒரு கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக தையல் போன்ற  கலை அவர்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுய உதவிக்குழுக்கள் போன்றவற்றின் உதவியோடு அவர்கள் தையல் இயந்திரத்தையும்  வாங்கி 

 வைத்திருப்பார்கள். ஆனால் அந்தத் தையல் இயந்திரத்தை பயன்படுத்தி தைப்பதற்கான  வாய்ப்பு மட்டும் அவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. எனவே அவர்களைக் கொண்டு முதலில் காட்டன் துணியினால் கைப்பைகள் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவெடுத்தேன். 

இதன் முதற்கட்டமாக திருநெல்வேலிக்கு அருகிலுள்ள  கடையநல்லூர் உட்பட ஆறு கிராமங்களைத் தேர்வு செய்தேன். இந்த கிராமங்களைப் பொறுத்தவரையில் இங்கே  வாழ்கின்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன நலம் குன்றியவர்களுக்காக  சில  தனியார் தொண்டு நிறுவனங்கள்  டே கேர்  சென்டர்களை நடத்துகிறார்கள்.

இந்த டே கேர் சென்டர்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் காலை முதல் மாலை வரை வெறுமனே இருந்துவிட்டு கொண்டு வந்த உணவை உண்டுவிட்டு  விட்டு  மாலையானதும்  வீடு திரும்பி விடுகின்றனர். இப்படி எந்த ஒரு வேலையும் இல்லாமல் சும்மாவே இருப்பதால் இவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது.

எனவே இவர்களை தற்சார்புடன் வாழத் தயார்படுத்த முடிவுசெய்தேன்.” என்கிற கவிதா அந்த கிராமங்களில்  இருக்கின்ற டே கேர்  சென்டர்களின் ஊழியர்கள் உதவியோடு அங்கு வருகின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை  வழங்குகிறார். 

சென்னையில் இருக்கும் கவிதா திருநெல்வேலி பகுதிகளிலிருக்கும் அவர்களுக்கு எப்படி வேலையை வழங்க முடியும் என்று கேட்கிறீர்களா? -நானும் இதே கேள்வியை கவிதாவிடம் முன்வைத்தேன்

“கைப்பைகள் செய்வதற்கான துணியை வெட்டி,டிசைன் செய்து அந்தந்த  டே-கேர்—சென்டரின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பிவிடுவேன். இதற்கான ஆலோசனைகள் முழுவதையும் வாட்ஸ்-அப் மூலமாக ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பிவிடுவேன்.

அவர் அதை உள்வாங்கிக்கொண்டு  அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதை விளக்கிவிட்டு, வெட்டி அனுப்பிய துணிகளைக்  கொடுப்பார். அவர்கள் அந்தத் துணிகளை அங்கேயே வைத்து தைப்பார்கள் அல்லது வீட்டிற்கு எடுத்துக்கொண்டுபோய் தைத்துக் கொடுப்பார்கள். தைத்து முடித்தவற்றை  சேகரித்து ஒருங்கிணைப்பாளர் திரும்பவும் எங்களுக்கு அனுப்பி வைப்பார்.

அதேபோல பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த தொழிலை செய்வதால், கைப்பைகளில்  வைக்கப்படும் பட்டன்களுக்கு கூட பிளாஸ்டிக் கிடையாது. அதற்கு பதிலாக  கொட்டாங்கச்சிகளை உடைத்து பல்வேறு அளவில் பட்டன்களாகத் தயாரிக்கிறோம்.

கிராமங்களில் வாழ்கின்ற மனநலம் குன்றியவர்கள் இந்த கொட்டாங்கச்சிகளை உடைக்கும்  வேலைகளை செய்கிறார்கள் .கொட்டாங்கச்சிகளை  யார் உடைத்தாலும் அது ஒரே சீராக உடையாது என்பதால் சிறிய துண்டுகளாக உடையும் கொட்டாங்கச்சிகளை  பட்டன்களாகவும் பெரிய துண்டுகளாக உடையும் கொட்டாங்கச்சிகளை  வைத்து tic-tac-toe போன்ற விளையாட்டுகளைத் தயாரிக்கவும்  செய்கிறோம் என்ற வியப்பூட்டுகிறார் கவிதா  நரசிம்மன். 

“திருநெல்வேலி மட்டுமல்லாமல் சென்னையின் புறநகர்ப் பகுதியான அயப்பாக்கம், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் இருக்கும் குறைவான கல்வித்தகுதி கொண்ட பெண்களும் இந்த கைப்பை தைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படி தமிழகம் முழுக்க ஐம்பத்தைந்து  பேர் கவிதாவால் வேலைவாய்ப்பைப் பெற்று வருகிறார்கள். இப்படி இவர்கள் செய்யும் வேலைக்கான சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் உரிய நேரத்தில்  சேர்க்கப்பட்டு விடும்.

“ஒரே ஒரு தயாரிப்பு மட்டும் செய்து கொண்டிருந்தால்  நிறைய பேருக்கு வேலை வழங்க முடியாது என்பதால் தயாரிப்புகளின் எண்ணிக்கையை  நாங்கள் அதிகப்படுத்தியிருக்கிறோம். கைப்பைகளில் மட்டும் பதினைந்து வகைகள் வைத்திருக்கிறோம்.

இப்படி கைப்பைகள் தயாரிக்கும்பொழுது மீதமாகக் கிடைக்கும் துண்டுத் துணிகளைக் கொண்டு பெண்களுக்கான அணிமணிகள் தயாரிக்கிறோம். அதேபோல இந்தத் துண்டுத் துணிகளை கலைநயத்துடன் ஒட்டி நோட்டுப் புத்தங்களின் கவர்களை உருவாக்குகிறோம்.

இதுதவிர பேப்ரிக் கவர் நோட்டுப் புத்தகங்கள், ரூல்டு, அன்ரூல்டு, பாக்கெட் நோட்டுப் புத்தகங்களையும்  தயாரிக்கிறோம். வெஜிடபிள் டையிங் பயன்படுத்தி துப்பட்டாக்கள் தயாரிப்பது, பேட்ச் வொர்க் துப்பட்டாக்கள் தயாரிப்பது, சாவிக் கொத்து, புக் மார்க் என்று தங்களுடைய தயாரிப்புகளின் நீளம் குறித்துப் பேசுகிற இவர், முதியோருக்கும் வேலைவாய்ப்பை வழங்குகிறார்.

முதியோர்,    பரம்பரிய பழமை மாறாமல் கூந்தல் வளர்ச்சித் தைலத்தை தயாரிக்கிறார்கள். அதேபோல கரிசலாங்கண்ணி, பாதாம் எண்ணெய்  போன்றவற்றை வைத்து இயற்கை கண் மையையும் இவர்கள் தயாரிக்கின்றனர்.

இந்தத் தயாரிப்புகளை  இவரது நிறுவனம் விற்பனை செய்கிறது.  செயற்கை பொருட்கள் சேர்க்கப்படாத பழ ஜாம், மசாலாப் பொடி வகைகள் மற்றும் முளைகட்டிய உலர் தானிய மாவு வகைகளையும் இவரது நிறுவனம் ஆர்டரின்பேரில் செய்து கொடுக்கிறது.

பிளாஸ்டிக்கை  முற்றிலும் தவிர்ப்பதற்காக சீயக்காய் பொடி, பூந்திக்கொட்டை போன்ற இயற்கை பொருட்களை வைத்து ஷாம்பு கட்டிகளைத் தயார் செய்திருக்கிறார். இந்த ஷாம்பூ கட்டிகளை சோப்பு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்து சோப்பை பயன்படுத்துவது போல பயன்படுத்திக்  கொள்ளலாம். இதுதவிர பயத்தமாவு, வெந்தயம், கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை போன்றவற்றைக் கொண்டு இயற்கை சோப்புகளையும் இவர் தயாரிக்கிறார்.

இப்படி நாளொரு புதுத் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி வரும் இவர் சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் ஏகாக்ரதா(Ekagrata)  என்கிற பெயரில் நேரடி விற்பனையகம்  ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார்.

’இப்படி சமூகத் தொழில்முனைவோராக பட்டையைக் கிளப்பும் நீங்கள்  உங்கள் பயணத்தை ஆரம்பித்த பொழுது முதலீடு சார்ந்த விஷயங்களுக்கு  என்ன செய்தீர்கள்?’ என்கிற மிக முக்கியமான கேள்வியை கவிதாவின் முன்வைத்தோம். 

 “இந்தத் தொழிலுக்கு நான்  புதிது என்பதால் எடுத்த உடனேயே நான் அகலக்கால் வைக்கவில்லை . இந்த தொழிலை ஆரம்பிப்பதற்காக முதலில் ரூ.10 ஆயிரத்தை மட்டுமே முதலீடு செய்தேன்.  நான் முதலீடு செய்த பணத்தை கொண்டு தேவையான துணிகளை வாங்கி  அதன்மூலம் சிலமாதிரிப் பொருட்களை   மட்டும் உருவாக்கி ஆன்லைனில் அவற்றை வெளியிட்டேன்.

அந்த மாதிரி தயாரிப்புகளை பார்த்து எனக்கு ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் ஆர்டர்கள் கிடைத்தபிறகும்கூட, மேலும் முதலீடு செய்ய என்னிடம் பணம் இல்லை என்பதால்,  ஆர்டர் கொடுப்பவரிடம் ஐம்பது  சதவீத முன்பணத்தை வாங்கிக்கொண்டே அவர்கள் கேட்ட பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன்.

ஆன்லைனில்  முகம்தெரியாத நபர்கள்தான்  ஆர்டர்கள்   கொடுக்கின்றனர் என்பதால் தொழிலில் ஓரளவு காலூன்றிய பிறகும்  கூட ஒரு பாதுகாப்புக்காக வாடிக்கையாளரிடம்  குறிப்பிட்ட அளவு முன்பணத்தை வாங்கிக்கொண்டே வேலை செய்ய ஆரம்பிக்கிறேன்.

இவ்வளவு குறைவான முதலீட்டில் இந்த தொழிலை ஆரம்பித்து என்னால் தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடத்த முடிகிறது  என்றால்  சூழலைக் கெடுக்காத  என் தயாரிப்புகளின்  தரம்தான் இதற்கு மிக முக்கிய காரணம் என்று நம்புகிறேன்” என்கிறார் கவிதா.

தன்னைப்போல சமூகத் தொழில் முனைவோராக வர விரும்புகிறவர்களுக்கு தன்னுடைய ஆலோசனையையும்  நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“எடுத்தவுடனேயே அகலக்கால் வைக்கக்கூடாது. குறைந்த அளவு முதலீடு செய்து கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை விரிவுபடுத்தி ஜெயிக்க வேண்டும். அதுமட்டுமல்ல,  இந்த காலத்தில் தொழில் ஆரம்பிப்பது ஒரு பெரிய விஷயமாக இருப்பதில்லை. ஆனால் அந்தத் தொழிலில் தொடர்ந்து  காலூன்றுவது  ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.

எனவே, தொழிலில் தொடர்ந்து நீடிக்க விரும்பினால்  முதலாளியாக மட்டும் இருக்க நினைக்காமல்  தாங்கள் செய்யும் தயாரிப்புகள் குறித்த முழு அறிவைப் பெற்றவராக  தொழில் முனைவோர் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர்கள் தங்கள் வேலையை  சரியாக செய்கிறார்களா என்பதை கவனிக்க முடியும்.

வெறும் பணத்தை மட்டும் முதலீடு செய்துவிட்டு பிறரை நம்பி தொழிலை செய்தால் அந்தத் தொழில் அவ்வளவாக சிறக்காது என்பதே என் எண்ணம். அதுமட்டுமல்ல எல்லோரும் கைவிட்டுச் சென்றால்கூட அந்த தொழிலை தூக்கி நிறுத்தும் திறனும் அறிவும் நிரம்பப் பெற்றவராக தொழில் முனைவோர் இருக்க வேண்டியது அவசியம் .

குறிப்பாக உள்ளூர் சந்தையை மட்டும் கவனத்தில் கொண்டு தொழிலை நடத்தாமல் உலக மார்க்கெட்டில் என்னென்ன நடக்கிறது, என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன போன்றவற்றை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப தொழிலில் புதுமைகளைப் புகுத்த வேண்டும்.அதே சமயத்தில் தரத்தையும் சமரசம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்”என்கிறார்  கவிதா தெளிவாக.

(தொடர்புக்கு: 8825749536)

ஜெயலக்ஷ்மி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.