லிங்க்டு இன் சேவையை சாதாரணமா நினைக்காதீங்க! (பயன்மிகு தளங்கள் தொடர் 2)

லிங்க்டு இன் சேவையை சாதாரணமா நினைக்காதீங்க! (பயன்மிகு தளங்கள் தொடர் 2)


ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சரி, பேஸ்புக்கின் ’ஒர்க்பிளேஸ்’ தெரியுமா?

தொழில்முறை பணியாளர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக, பேஸ்புக் வழங்கி வரும் சேவை இது. முழுக்க, முழுக்க தொழில்முறை உரையாடலுக்கான வலைப்பின்னல் சேவை.

ஃபேஸ்புக் அறிமுகமான காலத்தில், அந்த சேவையை பயன்படுத்த கல்லூரி இமெயில் முகவரி அவசியம் என இருந்தது போல், ஒர்க்பிளேஸ் சேவையை அணுக நிறுவன இமெயில் முகவரி அல்லது பயணர் பெயர் அவசியம் என்பதில் இருந்தே இந்த சேவையின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

எனினும், நாம் இப்போது ஃபேஸ் புக்கின் ஒர்க்பிளேஸ் சேவை பற்றி பார்க்கப்போவதில்லை, மாறாக லிங்க்டுஇன் (linkedin ) வலைப்பின்னல் சேவை பற்றி பார்க்கப்போகிறோம்.

ஏனெனில், லிங்க்டுஇன் தான் தொழில்முறை வலைப்பின்னல் சேவைகளில் முன்னோடி என்பது மட்டும் அல்ல, இதற்கு போட்டியாக தான், பேஸ்புக், தொழில்முறையினருக்கான ஒர்க்பிளேஸ் சேவையை அறிமுகம் செய்தது.

Image by BedexpStock from Pixabay

சமூக வலைப்பின்னல் உலகில் பேஸ்புக் நம்பர் ஒன் சேவையாக இருக்கலாம். ஆனால், தொழில்முறை பயன்பாடு என்று எடுத்துக்கொண்டால் லிங்க்டுஇன் தான் அதிகம் நாடப்படும் சேவையாக இருக்கிறது.

கோடிக்கணக்கில் பயனாளிகளை கொண்டிருந்தாலும், இந்த பிரிவை கோட்டைவிட்டுவிடக்கூடாது என்று தான்,   ஃபேஸ்புக், அலுவல் நோக்கிலான பயன்பாட்டை குறி வைத்து லிங்க்டுஇன் சேவையுடன் மல்லுக் கட்டும் வகையில் ஒர்க்பிளேஸ் சேவையை அறிமுகம் செய்தது.

லிங்க்டுஇன் சேவையில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கலாம். இந்த வலைப்பின்னலின் நோக்கம் தான் அதை ஸ்பெஷலானதாக ஆக்குகிறது.

தொழில்முறையிலான தொடர்புகளை ஏற்படுத்தி தருவதும், அதன் மூலம் புதிய வாய்ப்புகளை கண்டறிய உதவுவதும் தான் லிங்க்டுஇன் சேவையின் நோக்கம்.

Image by pasja1000 from Pixabay

அதாவது, பேஸ்புக் நட்பு வலை விரிக்க வைக்கிறது என்றால், லிங்க்டுஇன் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வழி செய்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், லிங்க்டுஇன் சேவை ஃபேஸ்புக் சேவைக்கு முன்பாகவே துவக்கப்பட்டுவிட்டது என்பது தான்.

ஆம், 1990 களின் இறுதியில், சிக்ஸ்டிகிரிஸ்.காம், பிரண்ட்ஸ்டர், கிளாஸ்மேட்ஸ்.காம் உள்ளிட்ட தளங்களின் வருகையால் இணையத்தில் சமூக வலைப்பின்னல் அலை வீசத்துவங்கிய நிலையில், 2002 ம் ஆண்டில் லிங்க்டுஇன் சேவை அறிமுகமானது.

சமூக வலைப்பின்னல் தளமாக அறிமுகமானாலும், துவக்கத்தில் இருந்தே லிங்க்டுஇன் தொழில்முறை தொடர்புகளை வளர்க்க வழி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியது. பின்னர் பேஸ்புக் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையிலும் கூட, லிங்க்டுஇன் தனது மைய நோக்கத்தில் இருந்து விலகவில்லை.

வர்த்தக உலகிலும், தொழில்முனைவோர்கள் மத்தியிலும் நெட்வொர்க்கிங் எனப்படும் வலைப்பின்னல் கருத்தாக்கம் மிகவும் பிரபலமானது. அதாவது தொழில் சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதை தான், இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இத்தகைய வலைப்பின்னல் தொடர்புகளை ஏற்படுத்தி தரும் நிகழ்ச்சிகள் நிஜ வாழ்க்கையிலும் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.

Image by kherrmann from Pixabay

இந்த வலைப்பின்ன வாய்ப்பை இணையமயமாக்கும் சேவையாக லிங்க்டுஇன் அறிமுகமாகி வெற்றி பெற்றது. அந்த வகையில், இது புதிய தொழில்வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் அடையாளம் காண உதவுவதற்கான இணைய மேடையாக அமைகிறது.

எனவே, தொழில் முனைவோர் முதல், கல்லூரி மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக்கில் எப்படி புதிய நட்புகளை உருவாக்கி கொள்ளலாமோ அதே போல, லின்க்டுஇன்னில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

அமைப்பிலும், செயல்பாட்டிலும் பேஸ்புக் போன்றதே என்றாலும், பயன்பாட்டில் முற்றிலும் வேறானது லின்க்டுஇன். இந்த சேவையிலும் டைம்லைனில் தகவல்களை பார்க்கலாம் என்றாலும், இந்த தளத்தில் வெட்டி பேச்சுகளுக்கோ, வீண் அரட்டைகளுக்கோ இடமில்லை.

பயனாளிகள் தங்களை தொழில்முறையாக வெளிப்படுத்திக்கொண்டு, அவ்விதமான உரையாடல்களையே எதிர்பார்க்கின்றனர்.

லின்க்டுஇன் தளத்தில் பயனாளிகள் தங்களுக்கான அறிமுக பக்கத்தை உருவாக்கி கொண்டு, அதில் தங்கள் கல்வி தகுதி, பணி அனுபவம், மென் திறன்கள் உள்ளிட்ட விவரங்களை பட்டியலிடலாம். ஆக, இந்த பக்கம் ஒருவரது சுயவிவரக்கோவை ( ரெஸ்யூம்) போலவே இருக்கும்.

Image by Gerd Altmann from Pixabay

லிங்க்டுஇன் தளத்தில், நிறுவன அதிகாரிகளும், தலைவர்களும் உறுப்பினர்களாக இருப்பதால், வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களில் தகுதியானவர்களை அவர்கள் இந்த தளம் மூலம் அடையாளம் கண்டு கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, வேலை தேடுபவர்களுக்கு இந்த தளம் சரியான களமாக அமையும். நிறுவனங்கள் இதை வேலைவாய்ப்புகளை வெளியிடும் மேடையாகவும் பயன்படுத்திக்கொள்கின்றன.

பேஸ்புக் புதிய நண்பர்களை பரிந்துரைப்பது போல, இந்த தளம், ஒருவரின் துறை மற்றும் பணி ஆர்வம் சார்ந்த தொடர்புகளை பரிந்துரைப்பதோடு, அவர்களின் திறமைக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளையும் பரிந்துரைக்கிறது.

அதே போல, ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் மேம்பட்ட வாய்ப்புகளை தேட, அல்லது தங்கள் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய வழிகாட்டிகளை கண்டறியவும் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். தொழில்முனைவோர்கள் தங்கள் துறை சார்ந்த உரையாடலை மேற்கொள்ளவும், எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். பேஸ்புக் போலவே, இதிலும் பயனாளிகள் சக உறுப்பினர்களுடன் மேசேஜிங் வழியே கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

தொழில்முனைவோர் மற்றும் வல்லுநர்கள் துறை சார்ந்த புதிய நுட்பங்களையும், புதிய போக்குகளையும் அறிந்து கொள்ளவும் இந்த தளம் உதவுகிறது. ஃபேஸ்புக் போலவே, இதிலும் விரும்பிய குழுவில் இணைத்துக்கொள்ளலாம்.

தொழில்முறை வல்லுநர்கள் தங்கள் ஆர்வத்தையும் இந்த தளம் மூலம் வெளிப்படுத்திக்கொள்ளலாம். முகநூலில் நிலைத்தகவல் போன்ற தகவல்களை பகிர்வதோடு, நீளமான பதிவுகளையும் எழுதி வெளியிடலாம். இதன் மூலம், துறைசார் வல்லுநர்கள் பார்வைகளையும் உறுப்பினர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

தொழில்முறையாக உங்கள் வளர்த்துக்கொள்ள விரும்பினால், நீங்கள் லிங்க்டுஇன் தளத்தில் உறுப்பினராக இருப்பது அவசியம். ஏற்கனவே, லிங்க்டுஇன் தளத்தை அறிந்திருந்து, அதில் உறுப்பினராகவும் இருப்பவர்கள் இந்த தளத்தின் தன்மையை உணர்ந்து கொண்டு, அதை இன்னும் தீவிரமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

லிங்க்டுஇன் சேவையில் மூழ்கிவிட்டால், அதன் மேம்பட்ட வசதிகள் கொண்ட கட்டணச் சேவையும் ஈர்ப்புடையதாக இருக்கும். இணைய முகவரி: https://www.linkedin.com/

(சைபர்சிம்மன், சுயேட்சை பத்திரிகையாளர், வலைப்பதிவாளர், நூலாசிரியர், ’இணைய மலர்’ மின்மடல் ஆசிரியர்).

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.