மதிப்புக் கூட்டுங்க!

மதிப்புக் கூட்டுங்க!

ஒரு பொருளை அப்படியே விற்பதைக்காட்டிலும் மதிப்புக்கூட்டி விற்பது உற்பத்தியாளருக்கு நல்ல லாபத்தைத் தரும்.

ஆனால் நம்மவர்கள் அதில் போதுமான அளவுக்கு ஆர்வம் செலுத்துவதில்லை என்பது வருத்தப்பட வைக்கும் விஷயம்.

அது என்ன மதிப்புக்கூட்டுதல்?

ஒரு சிறிய எடுத்துக்காட்டுமூலம் இதனை விளக்கலாம். நீங்கள் ஒரு பால் பண்ணை வைத்திருக்கிறீர்கள். தினமும் 100 லிட்டர் பால் கறக்கிறீர்கள். அதனை உள்ளூரில் விற்பனை செய்கிறீர்கள். அல்லது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின்மூலம் விற்பனை செய்து உடனடியாகக் காசு பார்க்கிறீர்கள். அவர்கள், அதனை வெளியில் விற்கின்றனர்.

 

ஒரு லிட்டர் பாலை அவர்கள் ரூ.20க்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். ஓரளவுக்கு சுமாரான லாபம் உங்களுக்கு. அதற்கு மாற்றாக இப்படி யோசித்துப் பாருங்களேன்.

அந்தப்பாலை அப்படியே விற்காமல், அதில் உள்ள கொழுப்புச்சத்து மிகுந்த க்ரீமைப் பிரித்தெடுங்கள். அதனைத் தனியாகப் பாக்கெட்டுகளில் அடைத்து பெரிய அங்காடிகளுக்கு விற்கலாம். இப்போது நீங்கள் பாலை மதிப்புக்கூட்டிவிட்டீர்கள். உங்களுக்கு இப்போது கூடுதல் லாபம் கிடைத்திருக்கும்.

கதை அத்தோடு முடிந்துவிடுவதில்லை. க்ரீம் நீக்கப்பட்ட பால், கொழுப்புச்சத்து அற்றதாக இருக்குமல்லவா? அதனைத் தனியாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு பிரச்சனை இருப்பவர்களும் இந்தப்பாலைப் பருக முடியும் என்பதை விளம்பரமாக செய்யலாம். இதில் ஒரு கூடுதல் லாபம் உங்களுக்கு.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட நீங்கள் தயார் என்றால் இன்னொன்றையும் செய்யலாம். அந்தப்பாலை உறை குத்தி, தயிராக ஆக்கிவிடலாம். தயிர் பாக்கெட்டுகள் ரெடி. அதில் ஒரு வருமானம். அதே தயிரை நீர் விட்டுக் கடைந்து, மோராக ஆக்கி பாக்கெட்டுகளில் அடைத்து விற்கலாம்.

உங்களிடம் எளிய தொழில்நுட்பம் இருந்தால் பனீர் தயாரித்தும் விற்பனை செய்யலாம். பனீரின் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியும். பெரிய நிறுவனமாக இருந்தால் பால் பவுடரும் சாத்தியம்.

ஆக, அடிப்படைப் பொருளான பாலை, அதன் ‘மதிப்பை’க் கூட்டி தயிராக, மோராக, பனீராக, க்ரீமாக, கொழுப்பு நீக்கப்பட்ட பாலாக (tonned milk), பால் பவுடராக என்று பல அவதாரங்களை உருவாக்கி காசு பார்க்க முடியும். இதைத்தான் மதிப்புக் கூட்டுதல் என்கிறோம்.

இதுகுறித்த போதுமான புரிதல் இல்லாததால் நம்மவர்கள் மூலப்பொருட்களை அப்படியே விற்கின்றனர். அதனால் அவர்களுக்கு பெரிய லாபம் இருப்பதில்லை. ஓரளவுக்குப் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மதிப்புக்கூட்டி பொருட்களை விற்று கணிசமான லாபம் சம்பாதிக்கலாம். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மரியாதை. எனவே ஏற்றுமதி செய்யத் துணியலாம்.

ஆகஸ்ட் 23-25 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட ஃபுட் ப்ரோ நிகழ்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு பார்த்த காட்சிகள் எல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்.

எளிய பொருட்களை மதிப்புக்கூட்டி அற்புதமான பொருட்களாக வைத்திருந்தனர். பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டு சந்தையைக் குறிவைத்துத் தயாரிக்கப்பட்டிருந்தன.

தென்னை வளர்ச்சி வாரியம், தேங்காய்த் தூளை பாட்டிலில் அடைத்து விற்கிறது. அதனை எடுத்துக் கரைத்து சட்னியாகப் பயன்படுத்தலாம். அதேபோல ஒரு தனியார் நிறுவனம், தேங்காய் சிப்ஸை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது.

 

‘என்ன இது, புதிய பொருளாக இருக்கிறதே’ என்று வாயில் போட்டுப் பார்த்தால், அவ்வளவு சுவை. அவலை இனிப்பாக செய்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு சுவை. அழகாக கட்டுமம் செய்து விற்கின்றனர்.

மிகையாக உற்பத்தியாகும் தேங்காயை எண்ணெய் தயாரிக்க மட்டும் பயன்படுத்தாமல் இதுபோல தேங்காய் சிப்ஸ் ஆக உருவாக்கலாமே! அதுதானே மதிப்புக்கூட்டல்…

 

-அருண்மொழி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *